தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏரல் ஓடக்கரை தெருவில் வசித்து வருபவர் பிள்ளை முருகன். இவருக்கு லிங்கராஜ் (42) என்ற மகன் உள்ளார். லிங்கராஜ் ஏரல் மெயின் பஜார் பகுதியில் சாமி அலங்கார பொருள்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு எட்டயபுரம் புங்கவர்நத்தம் பகுதியில் வசித்து வந்த அய்யாதுரை மகன் பாலசுப்பிரமணியன் (63) என்பவர் தன்னை ஒரு சாமியார் என்று அறிமுகப்படுத்தியுள்ளார்.
மேலும் லிங்கராஜிடம் தான் அருள்வாக்கு கூறுவதாகவும் புங்கவர்நத்தத்தில் புதிய திருக்கோயில் ஒன்றை ஆரம்பித்து அங்கு விசேஷ பூஜைகள் நடத்தி பல பிரச்சனைகளை தீர்த்து உள்ளதாகவும் பேசியுள்ளார். மேலும் இழந்த பணத்தை மீட்கவும், கொடுத்த பணத்தை இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி லிங்கராஜை ஏமாற்றியுள்ளார்.மேலும் பாலசுப்ரமணியனின் மனைவி பாண்டியம்மாள் மற்றும் மகன் அய்யாதுரை ஆகியோரையும் லிங்கராஜிடம் அறிமுகப்படுத்தி லிங்கராஜுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக நடந்து கொண்டுள்ளார்.
இதனை எல்லாம் நம்பிய லிங்கராஜ் பூஜை செய்ய வேண்டும் அப்படி செய்தால் தொழில் பெரிய அளவில் நடைபெறும் என ஆசையில் கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து கடந்த 2023 ஆம் ஆண்டு வரை தவணை முறையில் ரூபாய் 38 லட்சம் பணம் கொடுத்துள்ளார். இதேபோன்று லிங்கராஜ் தனது நண்பர் ஆனந்தகுமாரையும் பாலசுப்ரமணியத்திடம் கூட்டிச் சென்றுள்ளார். அவரிடமும் ரூபாய் 29 லட்சம் பணத்தையும் வாங்கிக் கொடுத்துள்ளார். அதன் பின் லிங்கராஜ் பாலசுப்ரமணியத்தை தொடர்பு கொண்ட போது அவரது தொலைபேசி எண் தொடர்பில் இல்லை என்றும், அவர் தலைமறைவாகிவிட்டதும் தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த லிங்கராஜ் மற்றும் அவரது நண்பர் ஆனந்தகுமார் இருவரும் எட்டயபுரம் புங்கவர்நத்தத்திற்கு வந்து பலமுறை தேடியுள்ளனர். மேலும் அதே ஊரைச் சேர்ந்த பலரிடம் இதுபோன்று மோசடி செய்து ரூ.2கோடி வரை பணம் பறித்துள்ளதாகவும் பின் தலைமறைவாகிவிட்டதையும் அறிந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் புகார் அளித்துள்ளார்.
மாவட்ட கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.அதன்படி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்த தேடுதலில் பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது மகன் அய்யாதுரை ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இது குறித்து தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
0 Comments