• Breaking News

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம்..... 18 பேரின் குண்டர் சட்டம் ரத்து..... ஐகோர்ட் உத்தரவு


     கள்ளக்குறிச்சி மாவட்டம், சுகுணாபுரத்தில் கடந்த ஜூன் மாதம் கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தனர். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி., நடத்த தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க., பா.ஜ., பா.ம.க., உள்ளிட்ட பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    இதையடுத்து சென்னை ஐகோர்ட், கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றி உத்தரவிட்டனர். இந்த வழக்கில், 18 பேர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் குண்டர் சட்டத்தை ரத்து செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கு இன்று (ஜன., 06) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: 6 மாதங்களுக்கு மேல் சிறையில் உள்ள நிலையில் இதற்கு மேலும் அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் வைத்திருப்பதில் என்ன தேவை? முதன்மை குற்றவாளிகள் கைது செய்யப்படுவதில்லை.தவறிழைத்த மதுவிலக்கு பிரிவு போலீசார் மீது எடுத்த நடவடிக்கைகளை குறித்து தெரியவில்லை. மதுவிலக்கு போலீஸ் பதிவு செய்யும் வழக்குகளில் பாதிக்கும் மேற்பட்டவை ஜோடிக்கப்பட்டவை. மதுவிலக்கு துறை என்ன செய்து கொண்டு இருக்கிறது? இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, குண்டர் சட்டத்தில் 18 பேரை கைது செய்த மாவட்ட கலெக்டரின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

    முன்னதாக, 'கள்ளச்சாராயம் வழக்கில் ஆவணங்கள் இன்று அல்லது நாளை சிபிஐ இடம் ஒப்படைக்கப்படும். 110 நாட்கள் கிராமமே அசாதாரண நிலையில் இருந்ததால் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்' என தமிழக அரசு விளக்கம் அளித்தது.

    No comments