போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் அல்லல்படும் நாகை நகராட்சிக்கு உட்பட்ட 15வது வார்டு மக்கள்..... பலமுறை கொடுத்த மனு குப்பை தொட்டிக்கு சென்று விட்டதா என பொதுமக்கள் வேதனை



நாகை நகராட்சிக்கு உட்பட்ட காடம்பாடி 15ம் வார்டு  பிள்ளையார் கோவில் தெருவிற்கு அருகாமையில் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் மற்றும் காவலர்கள் குடியிருப்பு, ஆயுதப்படை மைதானம் உள்ளிட்டவை உள்ளன. இவற்றை சுற்றி  சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் வீடு கட்டி வசித்து வரும் நிலையில், இவர்களுக்கான அடிப்படைத் தேவைகள் இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை என அப்பகுதியினர் வேதனை தெரிவிக்கின்றனர். 


அடிப்படைத் தேவைகளில் மிக முக்கிய ஒன்றான, குடிநீர் தேவையை கூட பூர்த்தி செய்ய முடியாமல் தவிக்கும் மக்கள் பலமுறை மனு அளித்தும் இவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சி உள்ளது. பிரதான சாலையை தவிர்த்து குடியிருப்புகளுக்கு செல்லும் பல்வேறு சாலைகள் முழுமை பெறாமல் இருப்பதோடு மட்டுமின்றி ஒத்தையடி பாதையாகவே இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி போதிய பராமரிப்பின்றி குடியிருப்பு அருகாமையில் உள்ள காலி இடங்களில் தேவையற்ற செடிகள் மற்றும் காடு வளர்ந்து பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் இரவு நேரங்களில் வீட்டிற்குள் வருவதாகவும், அதுமட்டுமின்றி தெருவிளக்குகள் அமைப்பதற்கான கம்பங்கள் அமைக்கப்பட்டு அவை வெறும் காட்சி பொருளாகவே இருந்து வருகிறது.



 மின்விளக்குகள் பொருத்தி ஒளிர விடப்படாத காரணத்தினால் இரவு நேரங்களில் ‌ பொதுமக்கள் அச்சமின்றி நடந்து கூட வர முடியாத நிலைமை இருப்பதாக அப்பகுதியினர் வேதனை தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர்‌ செல்லும் பாதாள சாக்கடை அவ்வபோது அடைப்பு ஏற்பட்டு காலை நேரங்களில் கழிவு நீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று பரவும் அபாயமும் இருப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஆகவே மாவட்ட நிர்வாகமும் நகராட்சியும் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என அப்பகுதியில் கோரிக்கை விடுத்துள்ளனர்.



மக்கள் நேரம் எடிட்டர் & நாகை மாவட்ட நிருபர் ஜீ.சக்கரவர்த்தி

Post a Comment

0 Comments