பஞ்சாபில் பலமுறை ஆட்சியில் இருந்த அகாலி தளம் கட்சியை சேர்ந்தவர் சுக்பிர் சிங் பாதல், 62. முன்னாள் முதல்வர் மறைந்த பிரகாஷ் சிங் பாதலின் மகனான இவர், பஞ்சாபின் துணை முதல்வராக இருமுறையும், பிரோஸ்புர் லோக்சபா தொகுதி எம்.பி.,யாகவும் பதவி வகித்துள்ளார். சீக்கிய மதத்தை நிந்தனை செய்த, தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவருக்கு, அப்போது துணை முதல்வராக இருந்த சுக்பிர் சிங் பாதல், தன் அதிகாரத்தை பயன்படுத்தி மன்னிப்பு வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த விவகாரங்களை சீக்கிய மதத்தின் உயரிய அமைப்பான அகாலி தக்த் விசாரித்தது. குற்றங்களை ஒப்புக்கொண்ட சுக்பிர் சிங் பாதல், அகாலி தக்த் முன் கடந்த ஆகஸ்டில் பகிரங்க மன்னிப்பு கோரினார். இதையடுத்து, அவருக்கு நேற்று முன்தினம் தண்டனை அளிக்கப்பட்டது. அமிர்தசரஸ் பொற்கோவிலில் சுத்தம் செய்யும் பணியை சுக்பிர் சிங் பாதல் உள்ளிட்ட தலைவர்கள் நிறைவேற்றினர். அப்போது, சக்கர நாற்காலியில் வந்த சுக்பிர் சிங், நேற்று தண்டனை விபரங்கள் அடங்கிய பதாகையை கழுத்தில் அணிந்து, கையில் ஈட்டி ஏந்தியபடி பொற்கோவிலின் வாயிலில் அமர்ந்திருந்தார்.
இந்நிலையில், இன்று (டிச.,04) அமிர்தசரஸ் பொற்கோவிலில் பணியில் இருந்த, பஞ்சாப் மாஜி துணை முதல்வர் சுக்பிர் சிங் பாதல் மீது மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அருகே இருந்தவர்கள் உடனடியாக துப்பாக்கிச் சூடு நடத்தியவரை மடக்கி பிடித்ததால், குண்டு படாமல் அதிர்ஷ்டவசமாக சுக்பிர் சிங் பாதல் உயிர் தப்பினார். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை பஞ்சாப் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
0 Comments