உண்டியலில் தவறி விழுந்த பக்தரின் ஐ போன்...... கடவுளுக்கு தான் சொந்தம் என கூறிய அறநிலையத்துறை அதிகாரிகள்

 


சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் விநாயகர் புரத்தில் வசித்து வருபவர் தினேஷ். இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது குடும்பத்துடன் திருப்போரூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக சென்றுள்ளார். சாமி தரிசனம் செய்த பின்னர் தினேஷ் அங்குள்ள உண்டியலில் காணிக்கை செலுத்தி உள்ளார். அப்போது காணிக்கை பணத்தை உண்டியல் உள்ளே போடும்போது தன்னுடைய ஐபோனையும் தவறுதலாக உண்டியலின்  உள்ளே போட்டுவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உண்டியலை திறந்து தனது ஐபோனை தருமாறு கோவில் ஊழியர்களிடம் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவர்கள் அறநிலையத்துறை அதிகாரிகளை தான் பார்க்க வேண்டும் என கூறியுள்ளனர்.

அதன் பின்னர் தினேஷ் சென்னையில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை  அலுவலகத்தில் சென்று புகார் அளித்துள்ளார். அவர்கள் திருப்போரூர் முருகன் கோவில் உண்டியல் திறக்கப்படும் போது தகவல் கூறுவோம் என கூறி அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று திருப்போரூர் முருகன் கோவில் உண்டியல் திறக்கப்பட்டது. இது குறித்து தினேஷுக்கும் தகவல் அறநிலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஐ போனை வாங்கும் ஆர்வத்தில் வந்த தினேஷிடம் கோயில் நிர்வாகத்தினர் உண்டியலில் விழுந்த அனைத்து பொருட்களும் முருகனுக்கே உரியது எனக் கூறி ஐபோனை கொடுக்கவில்லை.

மேலும் தினேஷிடம் இந்த ஐபோனில் உள்ள முக்கியமான தரவுகளை மட்டும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம் என கூறியுள்ளனர். இதனால் தினேஷ் எழுத்துப்பூர்வமாக இதனை எழுதிக் கொடுத்துவிட்டு ஐபோனில் உள்ள சிம் கார்டு மற்றும் மெமரி கார்டுகளை வாங்கிக் கொண்டு சென்றுள்ளார். உண்டியலில் உள்ள காணிக்கை பணத்துடன் ஐபோன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments