வேலுார் சிறையில் உள்ள பெண் கைதிக்கு ஜாமின் வழங்கி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது; நிபந்தனைகளும் விதித்திருந்தது.
ஜாமின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததால், 300 நாட்களாகியும் அவரால் சிறையில் இருந்து வெளியே வர முடியவில்லை. இதுகுறித்து, பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியானது.
இதையடுத்து, ஜாமின் கிடைத்தும் சிறையில் இருந்து வெளியே வர முடியாத கைதிகளின் எண்ணிக்கை குறித்த விபரங்களை தாக்கல் செய்யும்படி, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், ஜோதிராமன் அடங்கிய அமர்வு உத்தரவிட்டிருந்தது.உத்தரவாதம் அளிக்க முடியாதது உள்ளிட்ட காரணங்களால், 175 கைதிகள் சிறையில் இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஜாமின் கிடைத்தும் சிறையில் இருப்பது துரதிருஷ்டவசமானது என்று கூறிய நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தனர்.உள்துறை செயலர், சிறைத்துறை டி.ஜி.பி., மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் செயலரை, வழக்கில் சேர்த்தனர்.
வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி, ''தமிழகம் முழுதும், 153 விசாரணை கைதிகள், 22 தண்டனை கைதிகள், உத்தரவாதம் செலுத்த முடியாததால் வெளிவர இயலவில்லை.
''மாவட்ட நீதிமன்றங்களில் இருந்து ஜாமின் உத்தரவுகள், சிறைக்கு தாமதமாக அனுப்பப்படுகின்றன. மத்திய அரசு திட்டத்தை பின்பற்றி, ஏழை கைதிகளுக்கு நிதி உதவி வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது,” என்றார்.
ஜாமின் கிடைத்த ஏழு நாட்களில் கைதிகள் வெளிவருவதை உறுதிசெய்ய, சட்டப் பணிகள் ஆணைக்குழு உரிய நடவடிக்கைகளை எடுக்கும்படி, நீதிபதிகள் அறிவுறுத்தினர். கீழமை நீதிமன்றங்கள் ஏழை கைதிகளுக்கு கடுமையான ஜாமின் நிபந்தனைகளை பிறப்பிக்கக்கூடாது எனவும், ஜாமின் உத்தரவாதம் அளிக்க, எந்த அரசு ஊழியர் முன்வருவர் எனவும், நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, தேவையின்றி சிறையில் இருக்கும் கைதிகளை விடுவிக்க, சட்ட நடைமுறைகளை பூர்த்தி செய்யவும், சட்ட உதவி மையங்கள் வாயிலாக மனுத்தாக்கல் செய்வதை உறுதி செய்யவும், உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர், புதுச்சேரி தலைமை செயலர் ஆகியோரை, வழக்கில் நீதிபதிகள் சேர்த்தனர். பதிவுத்துறை உடன் ஒருங்கிணைந்து துரித நடவடிக்கை எடுப்பதாகவும், கைதிகளுக்கு சட்ட உதவி அளிப்பதாகவும், சட்டப்பணிகள் ஆணைக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஏழை கைதிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்ட விபரங்கள், நிலுவையில் உள்ளவை குறித்த விபரங்களை அளிக்கவும், தகுதியான கைதிகள் நிதி உதவி பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை, ஜனவரி 6க்கு தள்ளி வைத்தனர்.
0 Comments