கட்சியின் முக்கிய தலைவர்களை சந்திக்க புதுடில்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த அவர் நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது;
கட்சியில் இன்னும் 10 நாட்களில் அனைத்து மாநிலங்களிலும் புதிய மாநில தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒவ்வொரு மாநில தலைவர் தேர்வுக்காக சிறப்பு அதிகாரிகள் இருப்பார்கள். நான் அந்தமான் நிகோபர் தீவுகளுக்கான அதிகாரி என்பதால் அது தொடர்பாக டில்லி செல்கிறேன்.
கட்சியின் தலைவர் நட்டாவை சந்தித்து தமிழக அரசியல் சூழல் குறித்தும் பேச உள்ளேன். குறிப்பாக, அண்ணா பல்கலைக்கழக நிகழ்வு, பெண்களுக்கு நடந்த பாதிப்புகள் குறித்து எடுத்துக் கூறவும் செல்கிறேன்.
தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர், அவர்கள் முன்னேற்றத்துக்கு இவர்களே முழு பொறுப்பு என்பது போல முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். பா.ஜ., ஆளும் மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பெண்களை லட்சாதிபதி ஆக்கி கொண்டிருக்கிறோம்.ஆனால் இங்கு டாஸ்மாக்கால் பெண்கள் கண்ணீர்விட்டுக் கொண்டிருக்கிறார்கள். டாஸ்மாக்கை மூடுவோம் என்று கூறி இங்கு ஆட்சிக்கு வந்தனர். எந்த வாக்குறுதியும் சரியாக நிறைவேற்றாமல் விளம்பரம் மட்டும் செய்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழக அரசு மீதும், காவல்துறை மீதும் நம்பிக்கை இல்லாமல் நீதிமன்றங்கள் தலையிடக் கூடிய மோசமான நிலையில் தமிழகத்தில் பெண்களின் நிலை இருக்கிறது.
அந்த சார் (அண்ணா பல்கலை. விவகாரம்) யார் என்று கேட்டால் இவர்களுக்கு சுர்ரென்று கோபம் வருகிறது. எந்த பிரச்னை என்றாலும் பெண் குழந்தைகள் சீரழிக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
மத்திய அமைச்சர்களை சென்று தமிழக அமைச்சர்கள் பார்க்கிறார்கள், நன்றி சொல்கிறார்கள். ஆனால் கீறல் விழுந்த ரிக்கார்டு போல ஒத்துழைப்பு தரவில்லை என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். பல துறைகளில் மத்திய அரசின் நிதி திருப்பிப் அனுப்பப்பட்டு இருக்கிறது. ஆனால் இதற்கு பதில் சொல்ல மாட்டேன் என்கிறார்கள். மத்திய அரசு ஒத்துழைப்புக் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments