தமிழகத்தில் மருத்துவக் கழிவு கொட்டிய விவகாரம்...... விளக்கம் அளிக்க கேரள ஐகோர்ட் உத்தரவு

 


திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி அருகே கோடகநல்லுார், நடுக்கல்லுார், முக்கூடல், மேலத்திடியூர் பகுதிகளில் கேரள மாநிலம், திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மருத்துவ மையத்தின் கழிவுகள் மூட்டை மூட்டையாக லாரிகளில் கொண்டு வந்து கொட்டப்பட்டன. மருத்துவக் கழிவுகளை இன்றைக்குள் அப்புறப்படுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த வாரம் உத்தரவிட்டது.

 அதன்படி, நேற்று காலை கேரள மாநில அதிகாரிகள் உட்பட 50 அலுவலர்கள் 18 டாரஸ் லாரிகள், அதற்குரிய பணியாளர்களுடன் திருநெல்வேலி வந்தனர்.பழவூர், நடுக்கல்லுார், கோடகநல்லுார், முக்கூடல் போன்ற பகுதியில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகளை டாரஸ் லாரிகளில் ஏற்றி தங்கள் மாநிலத்துக்கே மீண்டும் கொண்டு சென்றனர். இன்றும் (டிச.,23) 2வது நாளாக கழிவு அகற்றும் பணி நடந்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக, கேரளா ஐகோர்ட்டின் சிறப்பு அமர்வு இன்று விசாரணை நடத்தியது.

 இது குறித்து, ஐகோர்ட் நீதிபதிகள் பெச்சு குரியன் தாமஸ் தலைமையிலான டிவிசன் பெஞ்ச், ''தமிழகத்தில் கேரளா அரசு மருத்துவக் கழிவை கொட்டியது ஏன்? மருத்துவக் கழிவுகளை கையாள்வதில் கேரளா அரசு தோல்வி அடைந்து விட்டது,'' என்று குற்றம் சாட்டியது.மருத்துவக் கழிவை முறையாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காத கேரளா அரசுக்கு ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. 

மருத்துவ கழிவுகளை உரிய முறையில் மேலாண்மை செய்வதில் மாநில அரசு தவறிவிட்டது என்று குற்றம் சாட்டிய ஐகோர்ட், கழிவுகளை திருநெல்வேலியில் சட்டவிரோதமாக கொட்டியது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Post a Comment

0 Comments