• Breaking News

    மகளுடன் பிரதமரை வரவேற்ற காவலர் சஸ்பெண்ட்....

     


    நாகை மாவட்டம், வடக்கு பொய்கைநல்லுாரைச் சேர்ந்தவர் விஜயசேகரன். காவல் துறையில் பணியாற்றி வருகிறார். இவரது மகள் துவாரகா மதிவதனி, அப்பகுதி பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார்.இவர், 2023 நவ., 30ல், வடக்கு பொய்கைநல்லுார், கோரக்கர் சித்தர் கோவிலுக்கு வந்த பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையிடம், 'நம்ம மோடி தாத்தாக்கிட்ட சொல்லி நாகையில் நவோதியா கேந்திர வித்யாலயா பள்ளிக்கூடம் கட்டி தர சொல்லுங்க மாமா' என, தனது கையால் எழுதிய அட்டையை வழங்கினார். பூரிப்படைந்த அண்ணாமலை, குழந்தையை துாக்கி உச்சி முகர்ந்து சென்றார்.

    ஜன., 2ம் தேதி, திருச்சி, பாரதிதாசன் பல்கலை, 38வது பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தந்த பிரதமர் மோடியை, வரவேற்பதற்காக தன் தந்தையுடன் சென்ற துவாரகா மதிவதனி, 'அன்புள்ள மோடி தாத்தா. என் பெயர் துவாரகா மதிவதினி. 2ம் வகுப்பு படிக்கிறேன். நான் ஹிந்தி கத்துக்கணும், எங்க ஊர் நாகப்பட்டினம், அரசு நடத்தும் பள்ளிக்கூடத்தில் ஹிந்தி படிக்க எதுவும் இல்லை. பள்ளிக்கூடம் கட்ட என் அப்பாகிட்ட இடம் தர சொல்றேன். நீங்க பள்ளிக்கூடம் கட்டித்தாங்க. அதுல நாங்களும் ஹிந்தி கத்துக்கணும்' என்ற வாசகம் எழுதிய அட்டையுடன் பிரதமரை வரவேற்க நின்றிருந்தார்.

    தொடர்ந்து, சீருடை சேவைகளின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் விஜயசேகரன் நடந்து கொண்டதாக காவல்துறை நடவடிக்கை எடுத்ததால் நீதிமன்றத்தை விஜயசேகரன் நாடியுள்ளார்.

    சில நாட்களுக்கு முன் சமூக வலைதளத்தில் இவர் பதிவிட்ட நடிகர் செந்தில் காமெடி புகைப்படம், வனத்துறை அமைச்சரை கிண்டல் செய்வது போல் இருப்பதாகவும், கடந்த 3ம் தேதி நாகை வந்த பா.ஜ., மாநில பொதுச்செயலர் கருப்பு முருகானந்தத்தை சந்தித்தார் என, விஜயசேகரனை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார். இது, சக போலீசாரிடையே குமுறலை ஏற்படுத்தியுள்ளது.

    போலீசார் கூறியதாவது:

    கடந்த 3ம் தேதி, விஜயசேகரன் பணியில் இருந்த வேட்டைக்காரனிருப்பு போலீஸ் ஸ்டேஷனில், காலை முதல் மதியம், 1:30 மணி வரை வழக்கமான துறை ரீதியான ஆய்வை எஸ்.பி., மேற்கொண்டார். வேதாரண்யம் டி.எஸ்.பி.,யும் உடனிருந்தார்.

    அன்று நாகையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த பா.ஜ., கருப்பு முருகானந்தம் மதியம், 1:00 மணியளவில் நாகையில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். எப்படி பா.ஜ., பிரமுகரை சந்தித்திருக்க முடியும். மேலும், பொழுதுபோக்காக சமுக வலைத்தளத்தில் பதிவிட்டதை அரசியலாக்கியுள்ளனர்.

    4ம் தேதி எஸ்.பி.,யின் உத்தரவை 5ம் தேதி நள்ளிரவு 12.15 மணிக்கு அவரது வீட்டில் வழங்கியுள்ளனர். போலீசாருக்கு கருத்து சுதந்திரம் இருக்க கூடாதா?

    இவ்வாறு கூறினர்.

    No comments