கோவை, மதுரையில் மெட்ரோ..... நிலம் எடுக்கும் பணி பிப்ரவரியில் துவக்கம்

 


கோவையில் ரூ.10,740 கோடியிலும், மதுரையில் ரூ.11.340 கோடி செலவிலும் மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணி, பிப்ரவரி மாதம் துவங்கும்' என சென்னை மெட்ரோ நிறுவன மேலாண்மை இயக்குனர் சித்திக் தகவல் தெரிவித்துள்ளார்.

கோவையில் நிருபர்களுக்கு சித்திக் அளித்த பேட்டி: கோவை மாநகராட்சியில் 32 ஸ்டேஷன் 2 வழி தடங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை உருவாக்கி, மாநில அரசு மூலம் மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளோம். சமீபத்தில் மத்திய அரசு கூடுதல் விவரங்களை கேட்டது. அந்த விவரங்களும் மாநில அரசு மூலம் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்திற்கு ஒப்புதல்களை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். கோவையில் ரூ.10,740 கோடியிலும், மதுரையில் ரூ.11.340 கோடி செலவிலும் மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.

2 ஆண்டுகள் இடங்களை தேர்வு செய்ய ஆகும். இந்த மெட்ரோ திட்டத்தின் ஆரம்ப கட்ட பணிகள் வரும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் துவங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மெட்ரோ பணிமனை அமைப்பதற்கு 16 ஏக்கர் நிலம் தேவை. வழித்தடம் அமைப்பதற்கு, 10 ஹெக்டேர் நிலம் தேவைப்படும். பணிமனை, சக்தி பொறியியல் கல்லுாரி அருகே அமைக்கப்படும். சிறிய பணிமனை ஒன்று, வழியம்பாளையம் பிரிவில் அமையும்.

மொத்த திட்டமும் அனுமதி கிடைத்த நாள் முதல் 3 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும். மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். கோவை மெட்ரோ ரயிலில் 3 பெட்டிகளில் 700 பேர் பயணிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. கோவை, மதுரை மெட்ரோ திட்டம் ஒருங்கிணைந்த திட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது. திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணி பிப்ரவரி மாதம் தொடங்கும்.

மெட்ரோ ரயில் திட்டம் பணிகள் என்பது 10 அல்லது 20 ஆண்டுகளாக மேற்கொள்வது அல்ல. 150 ஆண்டுகளுக்கான கட்டமைப்பு ஆகும். கோவையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ அமைக்க 16 ஹெக்டேர் நிலம் தேவை. இந்த திட்டத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

மெட்ரோ பாதையில், 30 மீட்டர் இடைவெளியில் ஒரு தூண் கட்டப்படும். கோவையில் அவினாசி ரோடு மேம்பாலம் அறிவிப்பை மனதில் வைத்து திட்டமிடுவோம். மதுரை திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 32 கிலோ மீட்டர் வரை மெட்ரோ ரயில் வழித்தடம் அமைகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments