மதுரை உசிலம்பட்டி வட்டம் விக்ரமங்கலம் பகுதியில் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இங்கு பயிலும் 11-ம் வகுப்பு மாணவி ஒருவர் விடுதியில் தங்கி படித்து வருகின்றார். இங்கு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மூர்த்தி என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதோடு பாலியல் தொல்லையும் கொடுத்ததாக அந்த மாணவி மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுப்பதற்கு தனது தாய், தந்தை மற்றும் உறவினர்களோடு வந்துள்ளார்.
அந்த புகாரில் தான் சொல்வதற்கு இணங்க வேண்டும் என மாணவியை மூர்த்தி மிரட்டுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் தன்னிடம் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தியதால் மன உளைச்சலுக்கு ஆளாக்கி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள மாணவி முயன்றுள்ளார். அப்போது சக மாணவிகள் அவரை காப்பாற்றி உள்ளனர். இந்த விஷயம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று புகார் அளிக்க அழைத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் ஆசிரியர் மூர்த்தி தன்னை பற்றி புகார் எதுவும் தெரிவிக்க கூடாது என்றும் மாணவியிடம் கூறியுள்ளார். இந்த புகார் குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கேட்ட போது மூர்த்தி கடந்த 24 ஆண்டுகளாக இந்த பள்ளியில் பணிபுரிந்து வருகின்றார். அவர் அவ்வாறு நடந்து கொள்ளகூடியவர் இல்லை எனவும் கூறினார். அதுமட்டுமல்லது கடந்த 2 நாட்களாக அவர் விடுமுறையில் உள்ளதால் மாணவியின் விவகாரம் குறித்து தனக்கு தெரியாது என்று தலைமை ஆசிரியர் கூறியுள்ளார்.
இந்நிலையில் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும் தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளி மாணவியின் புகாரை தொடர்ந்து காவல்துறையினரின் விசாரணை நடைபெற்று வருகின்ற நிலையில் தலைமை ஆசிரியரின் அறிக்கையை பெற்று ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கள்ளர் மேல்நிலைப்பள்ளி இணை இயக்குனர் முனியசாமி தகவல் தெரிவித்துள்ளார்.
0 Comments