புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புளியஞ்சோலை பகுதியில் ரகுமான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சகுபர் நிஷா(23) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. கடந்த 45 நாட்களுக்கு முன்பு நிஷாவுக்கு இரண்டாவதாக குழந்தை பிறந்தது. பிரசவத்திற்காக அம்மா வீட்டுக்கு சென்ற நிஷா மூன்று நாட்களுக்கு முன்பு தான் கணவர் வீட்டிற்கு வந்துள்ளார்.
நேற்று முன்தினம் மர்மமான முறையில் நிஷா கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் நிஷாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் நிஷா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய முதல் விசாரணையில் ரகுமான் குடும்ப பிரச்சினை காரணமாக தனது மனைவியை குத்தி கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். ஏன் கொலை செய்தீர்கள் எனக் கேட்ட போது அவர் சரியாக பதிலளிக்கவில்லை. அதன் பிறகு தொடர்ந்து விசாரித்த போது நான் எனது மனைவியை கொலை செய்யவில்லை. போலீசுக்கு பயந்து தான் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டேன் என கூறினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ரகுமான் வீட்டிற்கு பின்புறம் வசிக்கும் முகமது அபு உஸ்மான் என்ற வாலிபரின் உடையில் ரத்தக்கரை இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அவரை கைது செய்து விசாரணை நடத்திய போது நிஷா அணிந்திருந்த அரை பவுன் தங்க நகையை பறிப்பதற்காக முகமது அவரை கொலை செய்தது தெரியவந்தது. இந்த விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments