தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் திருச்சி மண்டலத்தைச் சேர்ந்த திருச்சி கரூர் புதுக்கோட்டை அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கான மண்டல பயிற்சி முகாம் 14.12.2024 சனிக்கிழமை அன்று தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருச்சியில் நடைபெற்றது.
திருச்சி மண்டலச் செயலர் முனைவர் ஜோ. சார்லஸ் செல்வராஜ் அவர்கள் வரவேற்புரை நல்கினார். திருச்சி மண்டலத் தலைவர் முனைவர் அ. சேட்டு அவர்கள் முன்னிலை வகித்தார்.
பயிற்சி முகாமினை தொடங்கி வைத்து மாநிலத்தலைவர். முனைவர். டேவிட் லிவிங்ஸ்டன் பேசும் போது, ஒரு இயக்கம் கடந்த காலத்தில் சாதித்த சாதனைகளையும், சந்தித்த சோதனைகளையும் உறுப்பினர்கள் முழுமையாக அறியும் போதுதான் அந்த இயக்கம் வலிமை பெறும். தியாகம் செய்தால் தான் கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும் போராட்ட குணமே வெற்றியைத் தேடித் தரும் என்று கூறினார். இயக்கம் வலிமை, அதன் செயல்பாடுகளில் பிரதிபலிக்கும். கோரிக்கை வென்றெடுப்பதற்கு உதவியாக இருக்கும். அதற்காகத்தான் நாம் பயிற்சி முகாமினை நடத்துகிறோம் என்றார்.
மேனாள் மாநில பொதுச் செயலர. முனைவர். திருச்செல்வம், இயக்க வரலாறு குறித்து பேசும் போது, 1971 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் தொடங்கப்பட்ட சங்கம் பல்வேறு சாதனைகளை நிகழ்தியது. அதில் முக்கியமானது, ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களின் ஒப்பந்த பணிக்காலத்தை ஓய்வூதியத்திற்கு எடுத்துக் கொள்ளச் செய்ததும், அரசு கல்லூரிகளை பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளாக மாற்றுவதற்கு எதிராக போராடி, அரசு கல்லூரிகளை, அரசு கல்லூரிகளாகவே நீடிக்கச் செய்தது ஆகும் என்றார். தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்கம் எவ்வாறு மெது மெதுவாக மேம்படுத்தப்பட்டது என்றும் அதனுடன் பேராசிரியர்களும் மாணவர்களும் வரலாற்று ரீதியாக எவ்வாறு முன்னேறினர் என்ற வரலாற்று தகவல்களை தக்க தகவல்களும் எடுத்து கூறினர்.
மேனாள் மாநிலத்தலைவர். முனைவர். கந்த சாமி அவர்கள், 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து பணி நீக்கம் செய்யப்பட்டு, பின்பு கல்லூரியில் சேர்ந்து, போராட்ட கால ஊதியத்தையும் பெற்றது கூட்டு போராட்டங்களின் வெற்றி என்று குறிப்பிட்டு, 5 அரசு கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக மாற்றுவதற்கு எதிராக நடைபெற்ற போராட்டம், இயக்கத்தின் மைல் கல் என்று எடுத்துரைத்தார். அனுபவ உணர்வுடன் தான் கைது செய்யப்பட்ட நிகழ்வுகளையும் மிக்க நிர்வாகிகளும் பொறுப்பாளர்களும் எவ்வாறு போராட்ட உணர்வுடன் கலந்து கொண்டனர் தமிழக அரசிடம் எவ்வாறு கோரிக்கைகளை எடுத்துரைத்து கோரிக்கைகளை வென்றெடுத்தனர் என்ற தகவல்களை கூறினார். புதுக்கோட்டை மன்னர் கல்லூரி கிளைத்தலைவர் நன்றியுரை கூறி முகாமை நிறைவு செய்தார்.
இரண்டாம் அமர்வில் திருச்சி மண்டல பொருளர் முனைவர் இரா.சந்துரு சிங்கார வேல்சாமி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.
முனைவர் கா. வாசுதேவன் முதல்வர் ,த.பெ.அ.க.க திருச்சி வாழ்த்துரை வழங்கினார் . பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் அகில இந்திய கூட்டமைப்பின் தேசிய செயலர், வே. ரவி வகுப்பில் படிக்கும் பாடங்களின் அடிப்படையில் அல்லாமல், போட்டித்தேர்வின் அடிப்படையில் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று தேசிய கல்விக் கொள்கையின் அம்சங்களை உயர்கல்வியில் புகுத்தி, சாதாரண மாணவர்களை கல்லூரிக் செல்ல விடாமல் முயற்சிக்கும் முடிவை முறியடிப்போம் என்று பேசினார்.
மாநிலப் பொருளர் பிரகாஷ் பேசும் போது, ஆசிரியர்கள் கல்விசாரா பணிகளை அதிகம் செய்யச்சொல்லி கட்டாயப்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்றார். மாநிலத் துணைத்தலைவர் கோபால கிருஷ்ணன், சமூக ஊடகங்களை சரியாக கையாள வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார். திருச்சி -22 ன் கிளைத்தலைவர் முனைவர் வெ.செல்வராணி அவர்கள் நன்றி பாராட்டி பேசினார்.
பயிற்சி முகாமின் மதியம் நடந்த நிறைவு விழாவில் முனைவர் பொ. அன்பரசு அவர்கள் வரவேற்புரை நல்கி துவக்கினார். மாநில துணைத்தலைவர். மகளிர். மதுரம், அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டியதன் அவசியத்தை பேசினார். மாநில மகளிர் இணைச்செயலர். துர்க்கா தேவி, நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகளை பட்டியலிட்டு, அதனை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை முன்னெடுப்போம் என்றார்.
நிறைவாக, நிறைவுரையாற்றிய மாநில பொதுச்செயலர். சோ. சுரேஷ், ஒவ்வொரு கோரிக்கையாக பட்டியலிட்டு ஒவ்வொரு கோரிக்கையும் அரசிடம் எவ்வாறு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது என்றும் கோரிக்கையின் தற்போதைய நிலைவுகளையும் அது வெற்றிய பெறும் சாத்தியக்கூறுகளையும் எடுத்து கூறினார். கடந்த கால போராட்டங்களின் மூலமாகவே, 2006 ஆம் ஆண்டுக்கு பிறகு அரசு கல்லூரிகளில் 4500 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும், தற்போது காலியாக உள்ள பணியிடங்களில் 4000 ஆசிரியர்கள் நியமனம் செய்வதற்காக, நீதிமன்றத்தில் உள்ள வழக்கினை விரைவில் முடிவுக்கு கொண்டு வந்து நியமனம் நடைபெற தமிழக அரசு முயற்சி செய்ய வேண்டும் என்றார். கடந்த கால அனுபவங்களை கொண்டு எதிர்கால சங்க நடவடிக்கைகளை தீர்மானிக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் திருச்சி மண்டல பொறுப்பாளர்கள் விரிவாக ஏற்பாடு செய்திருந்தனர் முன்னதாக திருச்சி மண்டல செயலாளர் சார்லஸ் செல்வராஜ் வரவேற்புரை ஆற்றினார் மண்டல தலைவர் சேட்டு நன்றி கூறினார். திருச்சி மண்டல இந்த பயிற்சிமுகாமிற்கு அனைத்து கிளையிலும் இருந்து 400 க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நிறைவாக திருச்சி மண்டல இணைச்செயலர் முனைவர் பு.பாண்டியன் திருச்சி மண்டல இணைச்செயலர், நன்றியுரை கூறி பயிற்சி முகாமினை நிறைவு செய்தார்.
0 Comments