திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசி பழங்கரை லட்சுமி நகர் பகுதியில் மருதாச்சல மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அவந்திகா(19) என்ற மகள் இருந்துள்ளார். அவந்திகாவும் ரமேஷ் என்பவரது மகள் மோனிகாவும்(19) நெருங்கிய தோழிகள். இருவரும் திருமுருகன்பூண்டி அருகே இருக்கும் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தனர்.
இருவரும் பகுதி நேரமாக பல்பொருள் அங்காடியில் வேலை பார்த்து வந்தனர். நேற்று மாலை அவந்திகா வீட்டிற்கு மோனிகா சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை திறந்து உள்ளே சென்றனர். அப்போது ஒரே அறையில் அவந்திகாவும் மோனிகாவும் தூக்கில் சடலமாக தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவிகளின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. மோனிகாவும் அவந்திகாவும் எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வார்கள். படிக்கும் போது ஒன்றாகவே இருந்து படிப்பார்கள்.
ஆனால் பெற்றோர் ஒன்றாக இருந்து படித்தால் சரியாக படிக்க மாட்டீர்கள், எனவே தனித்தனியாக இருந்து படிக்குமாறு அறிவுரை வழங்கியுள்ளனர். இதனால் தங்களை பிரித்து விடுவார்களோ என்ற பயதில் இரண்டு பேரும் தற்கொலை செய்ததாக போலீசார் கூறியுள்ளனர். இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments