பிரிந்து சென்ற மனைவி..... மாமியாரை அரிவாளால் வெட்டி கொன்ற மருமகன்....


 தேனி மாவட்டத்தில் உள்ள அல்லி நகரம் அரசு மேல்நிலைப்பள்ளி தெருவில் சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லீலாவதி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சின்னசாமி உயிரிழந்தார். இந்த தம்பதிக்கு காமேஷ் என்ற மகனும், கௌசல்யா என்ற மகளும் இருக்கின்றனர். கௌசல்யா திண்டுக்கல் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பிச்சைமுத்து என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிச்சமுத்து லாரி டிரைவராக இருக்கிறார். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கௌசல்யா தனது கணவரை பிரிந்து லீலாவதியுடன் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் காலை கௌசல்யா வேலைக்கு சென்று விட்டார். லீலாவதி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவரது வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டதால் அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது முகத்தை துணியால் மூடியபடி மாடிப்படி வழியாக ஒருவர் ஓடியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது சமையலறையில் படுகாயங்களுடன் லீலாவதி சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று லீலாவதியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது பிச்சை முத்து கௌசல்யாவை கொலை செய்தது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்த போது அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. பிச்சைமுத்து போலீசாரிடம் கூறியதாவது, என் மனைவி பிரிந்து சென்றதற்கு என் மாமியார் தான் காரணம் என நினைத்தேன். மனைவியை பார்த்து பேசுவதற்காக சென்றேன். ஆனால் வீட்டில் லீலாவதி தான் இருந்தார். எனக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்து அரிவாளால் அவரை வெட்டி விட்டு தப்பி சென்றேன் என வாக்குமூலம் அளித்துள்ளார். அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments