நாகையில் தடை செய்யப்பட்ட சீன பூண்டு விற்பனை...... உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு....

 


உடலுக்கு தீங்கு விளைவிக்கும், இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட சீன பூண்டுகள் விற்பனை செய்யப்படுகிறதா  என்று நாகப்பட்டினம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ் தலைமையில், நாகப்பட்டினம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அ.தி.அன்பழகன், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆண்டனிபிரபு, பாலகுரு, சீனிவாசன், திலீப், சஞ்சய் ஆகியோர் நாகப்பட்டினம் கடை தெருவில் உள்ள வணிக நிறுவனங்களில் இன்று ( 03.12.24 ) அதிரடி ஆய்வு நடத்தினர். 


அந்த ஆய்வில் வழக்கத்தை விட அளவு பெரிதாக உள்ள பூண்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரியவந்தது. அதில் சில கடைக்காரர்கள் சீன பூண்டு என்று சொல்லியே விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து 10-க்கும் மேற்பட்ட கடைகளில் சுமார் 100 கிலோ வழக்கத்தை விட அளவில் பெரிதாக உள்ள பூண்டுகளை உணவு பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர். 

இதுகுறித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ் " உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சீன பூண்டுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. சமையலுக்கு அதிகம் பயன்படுத்தக்கூடிய பூண்டின் விலை விறுவிறுவென உயர்ந்துள்ளது.  இந்த நெருக்கடியை பயன்படுத்தி ரசாயனம் கலக்கப்பட்ட சீன பூண்டு வகைகள் இந்திய சந்தைக்குள் விதிகளை மீறி கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல் வந்தது. 

இந்த வகை பூண்டு கேடு விளைவிக்கும் என்பதை உணர்ந்த மத்திய அரசு 10 ஆண்டுகளுக்கு முன்பே தடை விதித்து விட்டது. இருப்பினும் சட்ட விதிமுறைகளை மீறி இந்தியாவுக்குள் இந்த பூண்டை சமூக விரோதிகள் கொண்டு விற்பனை செய்கின்றனர்.

சீன வகை பூண்டை கண்டுபிடிப்பது எளிதானது. நாட்டுப்பூண்டின் பற்கள் சிறிதாக இருக்கும். சீன பூண்டுடைய பற்கள் வழக்கத்தை விட பெரிதாக, ரோஸ் நிறத்தில் இருக்கும். மேலும் மணம் குறைவாக இருக்கும். 

உற்பத்தியை அதிகரிக்க அதிக ரசாயனங்கள் சேர்க்கப்படுவதால் அது உடலுக்குள் சென்றால் கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தலாம். 

 இந்த நிலையில் தான் நாகையில் நடத்தப்பட்ட ஆய்வில் சீன பூண்டுக்கான அனைத்து அறிகுறிகளும் இருந்ததால் 10 கடைகளில் ரூ. 40 ஆயிரம் மதிப்புள்ள  100 கிலோ பூண்டு பறிமுதல் செய்துள்ளோம். தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ள இந்த பூண்டு உணவு பகுப்பாய்வு அனுப்பப்பட்டுள்ளது.

இது போன்ற பூண்டுகள் கும்பகோணத்தில் மொத்த வியாபாரியிடம் இருந்து விற்பனைக்காக நாகைக்கு வந்திருக்கிறது. அந்த வியாபாரிடம் தொடர்பு கொண்டு கேட்டால் அவர் இமாச்சல் பிரதேசத்தில் இருந்து வந்ததாக கூறுகிறார். இருந்தும் சீன பூண்டு குறித்து கும்பகோணத்தில் தனிக்குழு ஆய்வு செய்து வருகிறது. தடை செய்யப்பட்ட சீனப் பூண்டுகளை விற்றால் உணவு பாதுகாப்பு துறை சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தொடர்ந்து மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் " என்று கூறினார். 

மக்கள் நேரம் எடிட்டர் மற்றும் நாகை மாவட்ட செய்தியாளர் ஜி.சக்கரவர்த்தி

Post a Comment

0 Comments