மகாராஷ்டிராவின் 288 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 20ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்ற நிலையில் நவம்பர் 23ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் பாஜக, ஏக்நாத் சிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இருப்பினும் தற்போது வரை முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. காரணம் பாஜக அதிக தொகுதிகளை கைப்பற்றியது.பாஜக 132 தொகுதிகளில் அமோக வெற்றிப் பெற்ற நிலையில், முதலமைச்சர் பதவி தேவேந்திர பட்னாவிஸ்க்குதான் என உறுதியாக உள்ளது. ஆனால் பீகாரில் குறைந்த இடத்தை கைப்பற்றிய நிதிஷ்குமாருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது போல ஏக்நாத் ஷிண்டேக்கு வழங்கப்பட வேண்டும் என சிவசேனா தரப்பு கூறி வருகிறது.
ஆனால் அதிக இடங்களை கைப்பற்றியவருக்குதான் முதலமைச்சர் பதவி எனவும், ஏக்நாத் ஷிண்டேக்கு துணை முதலமைச்சர் பதவிதான் வழங்கப்படும் என பாஜக உறுதியாக உள்ளது. மேலும் துணை முதலமைச்சர் பதவியை ஏக்நாத் ஏற்க முடியாமல் போனால், அவர் மத்திய அமைச்சர் ஆகும் வாய்ப்பையும் பாஜக தந்துள்ளது என மத்திய அமைச்சர ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஏக்நாத் ஷிண்டே “ பாஜகவின் உயர்மட்ட தலைமைக்கு எனது நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவேன். பாஜகவின் முடிவிற்கு உடன்படுவேன். மகாராஷ்டிராவின் எனது 2.5 ஆண்டுகால ஆட்சி “வரலாற்றில் பொன் எழுத்துக்களால்” பொறிக்கப்படும்” என தெரிவித்தார்.
இந்நிலையில் மகாராஷ்டிர பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் மும்பையில் புதன்கிழமை (டிச. 4) நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் தேவேந்திர ஃபட்னவீஸ் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பதவியேற்புக்கு முந்தைய தினம் நடைபெறும் பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பாஜக மேலிடப் பார்வையாளராக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.இக்கூட்டத்திற்கு பிறகு கூட்டணித் தலைவர்களுடன் சென்று ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க ஃபட்னவீஸ் உரிமை கோருவார் எனத் தெரிகிறது. மகாராஷ்டிர முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சி தெற்கு மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் டிச. 5-ஆம் தேதி மாலை நடைபெறும் எனவும் அதில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் பங்கேற்பதும் ஏற்கெனவே உறுதியாகிவிட்டதாகவும் பாஜக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 Comments