முதல் தகவல் அறிக்கை எழுதப்பட்டிருக்கும் விதம் மிக மோசமாக உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியை குறை கூறும் வகையில் உள்ளது' என அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையின் போது சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.அண்ணா பல்கலை மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில், சென்னை ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு இன்று (டிச.,28) நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை குறித்த அறிக்கையை சீல் வைத்த உறையில், போலீசார் தாக்கல் செய்தனர். இதையடுத்து தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அரசு தரப்பில் கூறியதாவது:
'நீதிமன்றம் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க தயாராக உள்ளோம். எல்லா முதல் தகவல் அறிக்கைகளும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. மாணவி வழக்கில் எப்.ஐ.ஆர்., இணையதளத்தில் பதிவேற்றம் செய்த உடனே முடக்கப்பட்டு விட்டது.
கோட்டூர்புரம் போலீசார் முதல் தகவல் அறிக்கை தயாரித்த பின், அது இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 14 பேர் தங்கள் மொபைல் மூலமாக எப்.ஐ.ஆர் காப்பியை பதிவிறக்கம் செய்துள்ளனர். அவர்கள் யார் என்று கண்டுபிடித்து விட்டோம். பெண்கள், குழந்தைகள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் தொடர்பான வழக்கு விவரங்களை கணினி தடுத்துவிடும். வழக்கை வேறு சட்டத்துக்கு மாற்றியபோது தொழில்நுட்ப கோளாறால் வெளியாகிவிட்டது.
எப்.ஐ.ஆர்.,யில் குறிப்பிடப்பட்டு இருந்த தகவல்களை வெளியிட்டவர்கள், ஊடகங்கள் அனைவருமே பதில் கூறியாக வேண்டும். போலீஸ் துறை கசியவிடவில்லை. இது குறித்து விசாரிக்கப்படும். பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளியில் சொல்லாமல் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு போலீசுக்கு மட்டுமில்லை; அனைவருக்குமே உள்ளது. இவ்வாறு தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் கூறியதாவது: முதல் தகவல் அறிக்கை எழுதப்பட்டிருக்கும் விதம் மிக மோசமாக உள்ளது. பாதிப்புக்கு உள்ளான பெண்ணை எப்படி குற்றம் சாட்டுவது என்பதற்கு உதாரணமாக எப்.ஐ.ஆர்., உள்ளது. அவரிடம் வாக்குமூலம் பெறும்போது போலீஸ் அதிகாரி உதவி செய்ய முடியாதா?
இணையத்தில் முதல் தகவல் அறிக்கை முடக்கப்பட்ட பிறகும், 14 பேர் அதை பார்த்தது எப்படி? போலீஸ் ஸ்டேஷனுக்கு வருவதற்கே பொதுமக்கள் அச்சப்படும் நிலை உள்ளது. யார் எப்.ஐ.ஆர்., பதிவிறக்கம் செய்கிறார்கள் என கண்டுபிடிக்க வசதி இருந்தும் ஏன் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
0 Comments