'ஐயோ நெஞ்சு வலிக்குதே'..... தரையில் படுத்து அலறிய கும்பகோணம் மாநகராட்சி மேயர்


கும்பகோணம் மாநகராட்சி மேயராக பதவி வகித்து வருகிறார் சரவணன். தமிழகத்திலேயே ஒரே காங்., கட்சி மேயராக உள்ள இவருக்கும், தி.மு.க., கவுன்சிலர்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

இதனிடையே, மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 54 தீர்மானங்களுக்கான கோப்புகளை தி.மு.க., கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி கேட்ட போது, கூட்டம் முடிந்துவிட்டதாகக் கூறிய மேயர், அவரது அறைக்குச் செல்ல முயன்றார்.இதனையறிந்து வேகமாக ஓடிச்சென்ற தட்சிணாமூர்த்தி, மேயர் அறை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மேயர் சரவணன் செய்வதறியாது திகைத்தார்.

அப்போது மேயர் சரவணன் திடீரென மாமன்ற அலுவலகத்தின் தரையில் படுத்தபடி, தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுவிட்டதாக அலறினார். பதறிப்போன கவுன்சிலர்கள் அவரை ஆசுவாசப்படுத்தி, மேயர் அறைக்கு அழைத்துச் சென்றனர்.

கோப்புகளைக் கேட்டால் நெஞ்சுவலி ஏற்பட்டுவிட்டது என்று மேயர் நடிப்பதாக தட்சிணாமூர்த்தி உட்பட தி.மு.க., கவுன்சிலர்கள் விமர்சித்தபடி நடையைக்கட்டினர்.

'ஐயோ நெஞ்சு வலிக்குதே' என்று மேயர் தரையில் படுத்து அலறிய சம்பவம் கும்பகோணம் மாநகராட்சியில் சிறுது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Post a Comment

0 Comments