கும்மிடிப்பூண்டி ஒன்றியம் குருராஜ கண்டிகை ஊராட்சி மன்ற தலைவராக அட்டவணை சாதி பிரிவை சேர்ந்த சி.ரவி என்பவர் தேர்வு செய்யப்பட்டார். இவர் மீது தொடக்கத்திலிருந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. இதனால் மாவட்ட நிர்வாகம் பலமுறை எச்சரித்தும் அறிவுரை வழங்கியும் வந்தது. ஆனால் கடந்த நிதி ஆண்டுகளில் ஊராட்சி மன்ற தலைவர் ரவி தன்னிச்சையாக செயல்பட்டு அரசுக்கு பல்வேறு வகையில் இழப்பீடுகளை ஏற்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து எழுந்த தொடர் புகாரையடுத்து மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் அதிகாரிகளுக்கு நேரடியாக வரவு செலவு கணக்குகளை கள ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.
கள ஆய்வின்படி பல லட்சங்கள் வரவுக்கும் செலவுக்கும் வித்தியாசம் இருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தியது, அரசு விதிமுறைகளை மீறி தன்னிச்சையாக செயல்பட்டது, அதிகார துஷ்பிரயோகம் செய்தது உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205 (11) படி ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு அளித்துள்ள அதிகாரத்தின்படி குருராஜா கண்டிகை ஊராட்சி மன்ற தலைவர் சி ரவியை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தகுதி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
0 Comments