சென்னையில் வாஜ்பாய் சிலை..... முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க பாஜக நிர்வாகிகள் திட்டம்

 


பா.ஜ.,வின் முன்னோடி அமைப்பான ஜன சங்கம், துவக்கப்பட்டதில் இருந்து, அரசியலில் இருந்த வாஜ்பாய், ஆறு ஆண்டுகள் பிரதமராகவும், அரை நுாற்றாண்டு காலம் எம்.பி.,யாகவும் இருந்தவர்.

இந்தியாவில் அமைந்த முதல் காங்கிரஸ் அல்லாத அமைச்சரவையில், வெளியுறவுத் துறை அமைச்சராகவும், பலமுறை எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். அவரது சாதனைகள் இன்றளவும் பேசப்படுகின்றன.மத்தியில் காங்கிரஸ் அல்லாத ஓர் அரசையும், கூட்டணி அரசையும், முதல்முறையாக முழு பதவிக்காலமும் வெற்றிகரமாக நடத்திக் காட்டியவர்.தொடர்ந்து மூன்றாவது முறையாக, பா.ஜ., தலைமையில் ஆட்சி நடப்பதற்கு, வாஜ்பாய் போன்ற தலைவர்கள் போட்ட அடித்தளமே காரணம்.

நாளை, வாஜ்பாய் பிறந்து 100 ஆண்டு நிறைவடைகிறது. அன்றைய தினத்தை நாடெங்கும் சிறப்பாக கொண்டாட, பா.ஜ., ஏற்பாடுகளை செய்து வருகிறது.வாஜ்பாய் 100 ஆண்டு நிறைவையொட்டி, சென்னையில் அவருக்கு சிலை அமைக்க, கடந்த ஓராண்டுக்கும் மேலாக பா.ஜ., முயற்சித்து வருகிறது.ஆனால், பொது இடங்களில் தலைவர்களின் சிலை அமைக்க, உச்ச நீதிமன்றம் தடை விதித்தது; மாநில அரசின் ஒத்துழைப்பின்மை ஆகியவற்றால் அது சாத்தியமாகவில்லை.

முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு, சென்னை கடற்கரை சாலையில் உள்ள மாநிலக் கல்லுாரி வளாகத்தில், கடந்த ஆண்டு சிலை அமைக்கப்பட்டது.அதுபோல், அரசு கல்வி நிறுவனங்கள் அல்லது அரசுக்கு சொந்தமான இடத்தில் வாஜ்பாய்க்கு சிலை அமைக்க, பா.ஜ., முக்கிய தலைவர்கள் முயற்சித்து வருகின்றனர்.

இது குறித்து பா.ஜ., நிர்வாகிகள் கூறுகையில், 'சென்னையில் வாஜ்பாய்க்கு சிலை, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு அவர் பெயர் வைக்க வேண்டும் என, மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

பல்வேறு காரணங்களால் அது நிறைவேறவில்லை. சென்னையில் முக்கியமான இடத்தில் வாஜ்பாய் சிலை அமைக்க இடம் ஒதுக்கக்கோரி, முதல்வர் ஸ்டாலினை சந்திக்க திட்டமிட்டுள்ளோம்.இந்த முயற்சிகளுக்கு உதவும்படி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களிடம் வலியுறுத்தி இருக்கிறோம்' என்றனர்.

Post a Comment

0 Comments