தமிழகத்தில், பால், தயிர், வெண்ணெய், நெய் போன்ற பால் பொருட்கள், பிளாஸ்டிக் பைகள், டப்பாக்களில் அடைத்து விற்கப்படுகின்றன. மட்கும் தன்மையற்ற பிளாஸ்டிக் பைகளை சேகரித்து மறுசுழற்சி செய்ய, ஆவின் நிறுவனம் எந்த ஏற்பாட்டையும் செய்யவில்லை. பிளாஸ்டிக் பைகளை துாக்கி எறிவதால், சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு, மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத, கண்ணாடி பாட்டில்கள் அல்லது, 'டெட்ரா பாக்கெட்'டுகளில், பால் விற்க உத்தரவிட வேண்டும்' என, சென்னையைச் சேர்ந்த அய்யா, சுரேந்திரநாத் கார்த்திக் ஆகியோர், தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதை விசாரித்த தீர்ப்பாயம், 'மீண்டும் பயன்படுத்தக் கூடிய அல்லது மறுசுழற்சி செய்யக் கூடிய பிளாஸ்டிக் பாட்டில் அல்லது கண்ணாடி பாட்டிலில், ஆவின் பால் விற்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆவின் நிறுவனம் ஆராய வேண்டும்' என்று உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு, தீர்ப்பாயத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆவின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி பாட்டிலில் பால் விற்பனை செய்தால், அதற்கான செலவு அதிகரிக்கும். பல நுாறு கோடி ரூபாய் செலவில், அதற்கான இயந்திரங்கள் வாங்க வேண்டியிருக்கும்' என்றார்.
அப்போது குறுக்கிட்ட, தமிழக அரசு வழக்கறிஞர், 'ஆவின் நிறுவனம், மற்ற நிறுவனங்களை விட குறைந்த விலையில், பால் விற்பனை செய்கிறது. பாட்டிலில் பால் விற்றால், விலை அதிகமாகி மக்கள் பாதிக்கப்படுவர். தனியார் நிறுவனங்களும் பிளாஸ்டிக் பைகளில் தான், பால் விற்பனை செய்கின்றன' என்றார்.
அதைத்தொடர்ந்து, தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர், 'மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பாட்டிலில், பால் விற்பனை செய்வது குறித்து, ஆவின் நிறுவனம் முதல்நிலை ஆய்வு நடத்த வேண்டும். தனியார் நிறுவனங்களுக்கு முன் மாதிரியாக ஆவின் இதை செய்யலாம்' என்று உத்தரவிட்டு, வழக்கின் அடுத்த விசாரணையை, ஜனவரி 4ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
0 Comments