திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொண்டாநகரம், கோடகநல்லூர், நடுக்கல்லூர் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கேரளா மருத்துவ கழிவுகள் மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த அதிகாரிகள் தமிழ்நாட்டிற்கு வந்து ஆய்வு மேற்கொண்ட நிலையில் பின்னர் அது ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய மருத்துவ கழிவுகள் இல்லை என்று தெரிவித்தனர்.
இருப்பினும் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கடிதம் எழுதி அனுப்பியது. கேரள மருத்துவக் கழிவுகளை உடனடியாக தமிழகத்திலிருந்து அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது.
இந்த மருத்துவ கழிவுகள் திருவனந்தபுரத்தில் உள்ள மண்டல புற்று நோய் மையம் மற்றும் கிரெடன்ஸ் தனியார் மருத்துவமனை கழிவுகள் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் இதுவரையில் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நெல்லையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்பிறகு கழிவுகளை கொண்டு வந்து கொட்டிய லாரியில் உரிமையாளர் மற்றும் தனியார் கழிவு மேலாண்மை நிறுவனத்தின் சூப்பர்வைசர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தற்போது நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொட்டப்பட்ட கேரள மருத்துவ கழிவுகள் மீண்டும் கேரளாவுக்கே எடுத்துச் செல்லப்படுகிறது. மேலும் கழிவுகளை எடுத்துச் செல்லும் பணிகள் தொடங்கப்பட இருக்கும் நிலையில் கேரளாவிலிருந்து 8 லாரிகள் மருத்துவ கழிவுகளை எடுத்து செல்வதற்காக வரவழைக்கப்பட்டுள்ளது.
0 Comments