தோரணமலை முருகன் கோவில் நூலகத்தில் போட்டி தேர்வு,நீட் தேர்வுகளுக்கான புத்தகங்கள்..... மாணவ, மாணவிகள் பயன்பெற வேண்டுகோள்


தோரணமலை முருகன் கோவிலில் செயல்படும்  கே.ஆதிநாராயணன்-சந்திர லீலா நினைவு நூலகத்தில் பல்வேறு போட்டி தேர்வுகள் மற்றும் நீட் தேர்வுகளுக்கான புத்தகங்கள் ஏராளமாக உள்ளன. எனவே மாணவ, மாணவிகள் இங்கு வந்து படித்து பயன்பெறும் படி கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தென்காசி-கடையம் சாலையில் தோரணமலை ஸ்ரீமுருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆன்மீகம் மட்டுமின்றி பல்வேறு நலத்திட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தோரணமலை கோவில் வளாகத்தில்,கோவிலுக்கு வருகை தரும் கிராமப்புற மாணவ, மாணவிகள் அறிவு வளர்ச்சி பெறவும், பல்வேறு போட்டித்தேர்வுகளில் தேர்ச்சி பெறவும் வேண்டி, கே.ஆதிநாராயணன்-சந்திரலீலா நினைவு நூலகம் அமைந்துள்ளது. இந்நூலத்தில் சுமார் 3,400க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.

குறிப்பாக அனைத்து போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள், பொறியியல், நீட் தேர்வுக்கான புத்தகங்கள் அதிகளவு இங்கு உள்ளது. இது தவிர பள்ளி, கல்லூரி பாடப்புத்தகங்கள், பொது அறிவு, கதைப்புத்தகம், திருக்குறள், அறிவியல் அறிஞர்கள், மருத்துவம். இலக்கியங்கள் மற்றும் தமிழ், ஆங்கிலம் தினசரி நாளிதழ்களும் இங்கு உள்ளன. மேலும்மாணவர்கள் பயன்பெறும் வகையில் இணைய தள வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.  அத்துடன் மாணவர்கள் தங்கி படிக்கும் வசதியும், அவர்களுக்கு 3 வேளையும் உணவு உள்ளிட்டவைகளும் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தவிர கோவில் வளாகத்தில் காவல்துறை மற்றும் ராணுவ பணியில் சேர விரும்புவோருக்கு  கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல் மற்றும் உடல் பலம் பெற ஏதுவாக உடற்பயிற்சி மைதானம் அமைந்துள்ளது. கிராம புற மாணவ, மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்கிடவும்,போட்டி தேர்வுக்கு தயாராகி, தேர்வு பெற்று அரசு பணியில் சேர்ந்திடவும் இந்நூலகத்தில்வந்திருந்து படித்து செல்லலாம். சீருடை பணியாளர் தேர்வுக்கு தயாராவோர் தங்கினால்; அதிகாலையில் கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல் போன்ற பயிற்சியில் ஈடுபடலாம். எனவே இந்த வாய்ப்பினை கிராமப்புற மாணவ, மாணவிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென தோரணமலை முருகன் கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments