நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்திபெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 468-வது ஆண்டாக கந்தூரி விழா நடக்கிறது. விழாவை முன்னிட்டு கடந்த மாதம்(நவம்பர்) 30-ந் தேதி தர்காவில் உள்ள 5 மினராக்களில் பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிலையில், கந்தூரி விழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடி ஊர்வலமாக தர்காவுக்கு கொண்டு வரப்பட்டது. நாகையில் இருந்து நாகூர் வரை சாலையோரம் நின்றபடி பொதுமக்கள் கொடி ஊர்வலத்தை கண்டு ரசித்தனர். ஊர்வலத்தை தொடர்ந்து சிறப்பு துவா ஓதப்பட்டு 5 மினராக்களிலும் ஒரே நேரத்தில் கொடி ஏற்றப்பட்டது. அப்போது கண் கவர் வாண வேடிக்கை நடந்தது. நாகூர் தர்கா முழுவதும் மின் அலங்கார விளக்குகளால் ஜொலித்தது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் வருகிற 11-ந் தேதி இரவு நடக்கிறது. மறுநாள் 12-ந் தேதி அதிகாலை நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
0 Comments