பி.ஆர்.அம்பேத்கர் குறித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு குறித்து ஆழ்ந்து சிந்திக்க வலியுறுத்தி, தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளான ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார், தெலுங்குதேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோருக்கு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.
இந்த கடிதங்களை தன் 'எக்ஸ்' பக்கத்தில் பகிர்ந்து, அவர் கூறியிருப்பதாவது: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பியை அவமதித்த பா.ஜ.,வை அம்பேத்கரை நேசிப்பவர்களால் ஆதரிக்க முடியாது. இதுபற்றி நிதிஷ் குமாரும் சந்திரபாபு நாயுடுவும் சிந்திக்க வேண்டும்.
அம்பேத்கர் பற்றிய அமித்ஷாவின் கருத்து, அவமரியாதைக்குரியது மட்டுமல்ல, அம்பேத்கர் மற்றும் அரசியலமைப்பு மீதான பா.ஜ.,வின் கண்ணோட்டத்தையும் வெளிப்படுத்தியது. அம்பேத்கர் குறித்து அமித் ஷா பார்லிமென்ட்டில் வெளியிட்ட அறிக்கை ஒட்டுமொத்த தேசத்தையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பி மற்றும் ஒடுக்கப்பட்ட உரிமைகளுக்காகப் போராடிய அம்பேத்கருக்கு எதிராக பா.ஜ., எப்படி இப்படி ஒரு கருத்தைச் சொல்லத் துணிகிறது? இது நாடு முழுதும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளது.பாபாசாகேப் அம்பேத்கர், ஒரு தலைவர் மட்டுமல்ல. நம் தேசத்தின் ஆன்மா. பா.ஜ.,வின் இந்த அறிக்கைக்குப் பிறகு, இந்த விஷயத்திலும் நீங்கள் ஆழமாக சிந்திப்பீர்கள் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இவ்வாறு அதில் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments