தேசிய மனித உரிமை கமிஷன் தலைவராக ராம சுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டதற்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் எம்.பி., ராகுல் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.தேசிய மனித உரிமைகள் கமிஷனின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராம நீதிபதி சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். கமிஷனின் தலைவராக இருந்த உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஏ.எம்.மிஸ்ரா, கடந்த ஜூன் 1ம் தேதி ஓய்வு பெற்றார்.
புதிய தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான தேர்வு குழு, பார்லிமென்ட் வளாகத்தில் கடந்த டிச.,18ம் தேதி கூடி விவாதித்தது.தேர்வுக்குழுவில் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, லோக்சபா எதிர்க் கட்சி தலைவர் ராகுல், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, தேசிய மனித உரிமைகள் கமிஷனின் தலைவராக ராம சுப்பிரமணியனை ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று நியமித்தார்.
கமிஷனின் உறுப் பினர்களாக பிரியங்க் கனுாங்கோ, முன்னாள் நீதிபதி பித்யூத் ரஞ்சன் சாரங்கி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மனித உரிமை கமிஷன் தலைவராக ராம சுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டதற்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் எம்.பி., ராகுல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தேர்வு செயல்முறை தவறு என அவர்கள் குறை கூறி உள்ளனர்.
ஆலோசனையின் போது பரஸ்பர ஆலோசனை மற்றும் ஒருமித்த கருத்து புறக்கணிக்கப்பட்டது என்றும் கார்கே, ராகுல் குற்றம் சாட்டி உள்ளனர். மனித உரிமை கமிஷன் தலைவர் பதவிக்கு நீதிபதிகள் ரோஹிண்டன் பாலி நாரிமன் மற்றும் மேத்யூ ஜோசப் ஆகியோரின் பெயரை, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் எம்.பி., ராகுல் முன்மொழிந்தனர்.
மனித உரிமை கமிஷன் உறுப்பினர்களாக, நீதிபதி எஸ். முரளிதர் மற்றும் நீதிபதி அகில் அப்துல்ஹமித் குரேஷி ஆகியோரின் பெயர்களை பரிந்துரைத்தனர். ஆனால் தங்கள் கருத்து புறக்கணிக்கப்பட்டதாக, காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
0 Comments