தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் புஷ்பா 2 திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ளது. இந்த படத்தின் முதல் நாள் ஷோவை காண நடிகர் அல்லு அர்ஜுன் ஒரு தியேட்டருக்கு வந்தார். அப்போது அவரை காண்பதற்கு ஏராளமான ரசிகர்கள் வந்ததால் கூட்டம் அலைமோதியது. அப்போது காவல்துறையினர் தடியடி நடத்தியதில் கூட்ட நெரிசலில் சிக்கிய ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவருடைய மகனுக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்.
இந்த விவகாரத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு அல்லு அர்ஜுன் 27 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்குவதாக அறிவித்தார். இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டார். அவருக்கு நீதிமன்றம் 14 நாட்கள் நீதிமன்ற காவல் விடுத்த நிலையில் பின்னர் நிபந்தனை ஜாமின் வழங்கியது. ஆனால் ஜாமீன் ஆவணங்கள் சிறை அதிகாரிகளிடம் செல்லாததால் நேற்று ஒருநாள் இரவு முழுவதும் சிறையில் தான் அல்லு அர்ஜுன் இருந்தார். இன்று காலை அவர் வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மீண்டும் நான் ஒரு முறை ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 20 வருடங்களாக என்னுடைய திரைப்படம் ரிலீஸ் ஆகும்போது ஒவ்வொரு முறையும் நான் ரசிகர்களை சந்திப்பது வழக்கம். ஆனால் இந்த முறை துரதிஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு நான் எல்லா வகையிலும் உறுதுணையாக இருப்பேன். நான் நலமுடன் இருக்கிறேன் என்னை நினைத்து யாரும் கவலைப்பட தேவையில்லை என்று கூறினார். மேலும் அல்லு அர்ஜுன் வீட்டிற்கு சென்ற போது அவருடைய குடும்பத்தினர் கண் கலங்கி வரவேற்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
0 Comments