முக்கூடல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் மருத்துவர், செவிலியர் நியமிக்க ஏற்பாடு செய்து தரும் படி முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதனிடம் பேரூராட்சி 14வது வார்டு கவுன்சிலர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து முக்கூடல் பேரூராட்சி 14வது வார்டு கவுன்சிலர் சிந்துஜா சார்பில் திமுக இளைஞரணி முத்துச்சாமி மற்றும் பொதுமக்கள் முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ஆலங்குளம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட முக்கூடல் பேரூராட்சி பகுதியில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முக்கூடல் பேரூராட்சி பகுதி மக்கள் மட்டுமின்றி அருகில் உள்ள, அரியநாயகிபுரம் ஊராட்சி பகுதிக்குட்பட்ட வடக்கு மற்றும் தெற்கு அரியநாயகிபுரம், தாளார்குளம், இலந்தைகுளம், அரசங்குளம் கிராம பொதுமக்களும், மயிலப்புரம் ஊராட்சி பகுதி பொதுமக்களும், பாப்பாக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட அமர்நாத் காலனி மற்றும் சிவகாமிபுரம் ஆகிய பகுதி பொது மக்களும்பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது இந்த மருத்துவமனை 30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இருப்பினும் இங்கு போதிய மருத்துவர்களும், செவிலியர்களும் இல்லாத நிலை உள்ளது. இதனால் அவசர சிகிச்சைக்கு வருவோர் மற்றும் பேறு காலத்திற்கு வருவோர் சுமார் 35 கிலோ மீட்டர் தூரம் உள்ள பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலை உள்ளதால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
எனவே பொதுமக்கள் பயன்பெறும் வகையில், முக்கூடல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை பணியமர்த்திட சுகாதார துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று, நிறைவேற்றித்தர ஏற்பாடு செய்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
அப்போது, தென்காசி தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பொன்னரசு வழக்கறிஞர்கள் ஹரி கிருஷ்ணன், பெர்வீன் ராம் மேலகரம் பேரூராட்சி கவுன்சிலர் சுந்தரம் (எ) சேகர், மாவட்ட அறங்காவலர் காலசாமி, குறும்பலாபேரி முத்துப்பாண்டியன், வேல்சாமி, முருகேசன் உடனிருந்தனர்.
0 Comments