காவலாளியை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து மயிலாடுதுறை நீதிமன்றம் தீர்ப்பு
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் சரகம் கீழ ஆத்துக்குடியைச் சேர்ந்த பெரியநாயகம்(55). இவர் நத்தம் அந்தோணியார் நடுநிலைப் பள்ளியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு ஜன.8-ம் தேதி கீழ ஆத்துக்குடியைச் சேர்ந்த கார்த்திக்(32) என்பவர் காவலாளி பெரியநாயகத்திடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். கொடுக்க மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த கார்த்திக் கட்டையால் தாக்கியதில் படுகாயம் அடைந்த பெரியநாயகம் உயிரிழந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் வைத்தீஸ்வரன் கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கார்த்தியை கைது செய்தனர்.இது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், கடந்த புதன்கிழமை அன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
காவலாளி பெரியநாயகத்தை கொலை செய்த கார்த்திக்குக்கு ஆயுள் தண்டனை, ரூ. 2 ஆயிரம் அபராதம், அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி விஜயகுமாரி உத்தரவிட்டார். இதையடுத்து கார்த்திக்கை போலீஸார் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.
No comments