மதுரை காமராஜ் பல்கலையில் மழையில் நனைந்த பருவத்தேர்வு விடைத்தாள்கள்

 


மதுரை காமராஜ் பல்கலையில் கல்லுாரி மாணவர்களின் பருவத்தேர்வு விடைத்தாள்கள் மழையில் நனைந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.

இப்பல்கலை இணைவிப்பு பெற்ற கல்லுாரிகளில் 2024 நவம்பர் தேர்வுகள் முடிந்துள்ளன. தற்போது பல்கலையில் மு.வ.ஹாலில் விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நடக்கின்றன. இதற்காக இந்த ஹாலில் லட்சக்கணக்கான விடைத்தாள்கள் பண்டல்களாக வைக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் பெய்த மழையால் ஹாலில் ஒரு பகுதியில் வைக்கப்பட்ட விடைத்தாள் பண்டல்கள்நனைந்ததாக தகவல் வெளியாகியது.

இதுதொடர்பாக கன்வீனர் குழு கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து நனைந்த விடைத்தாள் பண்டல்களை தனியாக எடுத்து உலர்த்தும் நடவடிக்கையை ஊழியர்கள் மேற்கொண்டனர்.

பேராசிரியர்கள் கூறியதாவது: பல்கலையில் செனட், கல்விப் பேரவை, கருத்தரங்குகள் நடக்கும் முக்கிய இடமாக மு.வ.,ஹால் உள்ளது. இதன் பராமரிப்பு தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. இந்த ஹாலில் நுாற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தும் போதிய கழிப்பறை வசதி இல்லை. புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

இங்கு திருத்தி முடிக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டிருந்த விடைத்தாள் கட்டுகள் இதுபோல் மழையில் நனைந்த சம்பவம் ஏற்கனவே நிகழ்ந்துள்ளது. ஹாலின் சுவர்களில் ஈரமடித்து மழை நீர் இறங்கும் பிரச்னை உள்ளது. இதன் காரணமாக விடைத்தாள் பண்டல்கள்நனைந்திருக்கலாம். ஒரு கவரில் 18 விடைத்தாள்கள் வைக்கப்பட்டிருக்கும். நனைந்தவை எந்த கல்லுாரிக்கானது என்ற விவரம் தெரியவில்லை. உலர்த்தியெடுத்த பின் விவரம் தெரியவரும் என்றனர்.

இதற்கிடையே இப்பல்கலை தேர்வாணையராக கூடுதல் பொறுப்பு வகித்த பேராசிரியர் தர்மராஜ், அப்பொறுப்பில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் அளித்துள்ளார். சிண்டிகேட் உறுப்பினராகவும் உள்ள இவர் தற்போது மூன்றாவது முறையாக ராஜினமா கடிதம் அளித்துள்ளார்.

2020 ல் தேர்வாணையராக கூடுதல் பொறுப்பு ஏற்ற இவர் தற்போது வரை தொடர்கிறார்.இவர் மீது தேர்வாணையர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஒருவர் சமீபத்தில் புகார் அளித்திருந்தார்.அதுகுறித்து கன்வீனர் குழு விசாரணை நடத்திய நிலையில் ராஜினமா கடிதம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments