கும்பக்கரை அருவியில் 8 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

 


தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த அருவிக்கு, கொடைக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படுகிறது. கும்பக்கரை அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் சுற்றுலா வருவது வழக்கம்.

இந்த சூழலில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக அருவிக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக நீர்வரத்து சீராக இருந்ததால் அருவியில் குளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து கும்பக்கரை அருவியில் 8 நாட்களுக்குப் பின் இன்று முதல் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் சோப்பு ஷாம்பு போன்ற பொருட்களை பயன்படுத்தக் கூடாது எனவும் உணவுப் பொருட்களை அருவி பகுதிக்கு எடுத்து வரக்கூடாது எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Post a Comment

0 Comments