பொங்கல் பண்டிகையை ஒட்டி, தமிழகத்தில், 18 மாவட்டங்களில், 400 இடங்களுக்கும் மேல் ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது,'' என, கால்நடை பராமரிப்புத்துறை கூடுதல் சிறப்பு திட்ட அதிகாரி நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: தமிழகம் முழுதும், 18 மாவட்டங்களில், 400 இடங்களுக்கும் மேல், ஜல்லிக்கட்டு, எருது விடுதல், மஞ்சு விரட்டு மற்றும் வடமாடு என, நான்கு பகுதிகளாக போட்டிகள் நடத்தப்படும். அந்த வகையில், மதுரை, விருதுநகர், தேனி, கரூர், திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், அரியலுார் ஆகிய மாவட்டங்களில், ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ளது.
தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பூர், சிவகங்கை, புதுக்கோட்டையில் உள்ள அறந்தாங்கியில், எருது விடுதல், மஞ்சு விரட்டு மற்றும் வடமாடு போன்ற விளையாட்டுகள் நடத்தப்பட உள்ளன.இதில், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் புலிக்குளம் காளைகள் பங்கேற்கும். அரியலுார், பெரம்பலுார், கரூர், தஞ்சாவூர், ராணிப்பேட்டை, வேலுார் உள்ளிட்ட பகுதிகளில் காங்கேயம் காளைகள் பங்கேற்கும். நாமக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில், உம்பளச்சேரி வகை காளைகள் பங்கேற்க உள்ளன.
ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டிகள், ஜனவரி முதல் மே மாதம் வரை நடத்தப்படும். அரசு வழிகாட்டு நெறிமுறைகள்படி, காவல் துறை, தீயணைப்பு துறை, பொதுப்பணி துறை, சுகாதாரத்துறை, கால்நடைத்துறை ஆகியவற்றின் மேற்பார்வையில் கண்காணிக்கப்படும்.
ஜல்லிக்கட்டு நடத்த வழிகாட்டு நெறிமுறைகளை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த போட்டிகள் நடத்தப்படும். ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விரும்புவோர், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள, www.jallikattu.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும். இதில், வருவாய் மாவட்டம் மற்றும் கிராமத்தின் பெயர், காளை உரிமையாளரின் பெயர், ஆதார் எண், மொபைல் போன் எண் உள்ளிட்ட தகவல்கள் கொடுக்கப்பட வேண்டும்.
மேலும், காளையின் வகை மற்றும் பூர்வீகம், காளையின் வயது, பல் வரிசைகள், காளை கொம்பின் நீளம், கொம்புகளுக்கு இடையே உள்ள இடைவெளி, உயரம், நிறம், அடையாளங்கள் மற்றும் மருத்துவ சான்றிதழ் உள்ளிட்ட தரவுகளை, இணையதளத்தில் பதிவிட வேண்டும். ஜல்லிக்கட்டில் காளைகளை பங்கேற்க வைக்க, இவ்வாறு பதிவு செய்து அனுமதி சீட்டு பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments