ராமேஸ்வரம்: வலையில் சிக்கிய 400 கிலோ கொப்பரை குலா மீன்..... ரூ.56 ஆயிரத்திற்கு விற்பனை


 ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 50-க்கும் அதிகமான நாட்டுப் படகுகளில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் தென்கடல் பகுதியான மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்றனர். 

மீன் பிடித்துவிட்டு நேற்று பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்திற்கு திரும்பிய மீனவர்கள் வலையில் நகரை, பாறை, நெத்திலி மற்றும் கிளாத்தி, சீலா, மாவுலா, கிளி, முண்டகண்ணி பாறை, கட்டா, சூவாரை உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மீன்கள் வரத்து எதிர்பார்த்த அளவுக்கு கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சியுடன் கரை திரும்பினர்.

இந்நிலையில் பாம்பனைச் சேர்ந்த சாம்சன் என்பவருக்கு சொந்தமான நாட்டு படகில் 3 மீட்டர் நீளமுடைய 400 கிலோ எடை கொண்ட கொப்பர குலா என்றழைக்கப்படும் வாள் மீன் (SWORD FISH) மீன் ஒன்று சிக்கியது. இதனையடுத்து அந்த கொப்பர குலா மீனை கேரளா மீன் வியாபாரி ஒருவர் கிலோ ரூ.140 என ரூ.56 ஆயிரம் கொடுத்து வாங்கி சென்றதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.கொப்பரை குலா மீனுக்கு கேரள மாநில அசைவ பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. 

இந்த மீனை அரை கிலோ, ஒரு கிலோ என வெட்டி எடை போட்டு விற்பனை செய்து விடுவேன் என கேரள வியாபாரி தெரிவித்தார். வாள் மீன்கள் நீண்ட, தட்டையான கத்தி போன்ற நீண்ட மூக்கை கொண்டது. இவை வேகமாக இடப்பெயர்ச்சி செய்யக்கூடியவை. இந்த வகை மீன், அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடலில் ஆழமான பகுதியில் வாழக்கூடியது. வழக்கமாக 3மீ நீளமும், அதிகபட்சமாக 4.55 மீ நீளமும் கொண்ட இந்த மீன் 650 கிலோ எடை வரை வளரக் கூடியது என தெரிவிக்கின்றனர்.

Post a Comment

0 Comments