கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் 32 வயதுடைய வாலிபர் வசித்து வருகிறார். இவர் தனது திருமணத்திற்காக மேட்ரிமோனியில் தனது விவரங்களை பதிவு செய்திருந்தார். அந்த மேட்ரிமோனி நிறுவனம் மூலம் ஒரு பெண் இந்த வாலிபருக்கு அறிமுகமானார். அவர் வாலிபரிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி வாட்ஸ் அப் வீடியோ கால் மூலமாக தொடர்ந்து பேசி உள்ளார்.
இந்த நிலையில் அந்த பெண் தனது அக்காவுக்கு உடல் நலம் சரியில்லை சிகிச்சைக்கு பணம் வேண்டும் என கூறியுள்ளார். அந்த வாலிபரிடமிருந்து பல்வேறு தவணைகளாக 7 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் பணம் வரை வாங்கியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து அந்த பெண்ணை தொடர்பு கொள்ள இயலவில்லை.
செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. இதுகுறித்து வாலிபர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரியா என்பவர் மோசடி செய்தது தெரியவந்தது. பிரியாவின் முதல் கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இரண்டாவது திருமணம் செய்த பிரியா கருத்து வேறுபாடு காரணமாக அவரையும் பிரிந்து விட்டார்.
பிரியாவுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அதோடு நிறுத்தாமல் மூன்றாவதாகவும் நான்காவதாகவும் அடுத்தடுத்து பிரியா திருமணம் செய்துள்ளார். ஈரோட்டை சேர்ந்த மற்றொரு வாலிபரிடமும் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பிரியா 4 லட்ச ரூபாய் வரை பணத்தை வாங்கியுள்ளார். இந்த விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments