திருவள்ளூரில் வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் தங்க நகை ரூ.4 லட்சம் ரொக்கம் கொள்ளை


திருவள்ளூர் நகராட்சி உட்பட்ட ஜெயின் நகரைச் சேர்ந்தவர் சுந்தரி (57). இவரது கணவர் ராஜன் நில அளவைத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு கவிதா என்ற ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் கணவர் உயிரிழந்ததையடுத்து ஓய்வூதியத்தை பெற்றுக் கொண்டு அப்பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.

 சுந்தரியின் மகள் கவிதா திருமணமாகி அதே பகுதியில் வசித்து வருகிறார். இதனால் நாள்தோறும் இரவு நேரத்தில் மகள் கவிதா வீட்டிற்கு சென்று  சுந்தரி தூங்க செல்வது வழக்கம். அதேபோல் நேற்று  முன்தினம் 16-ஆம் தேதி இரவு தூங்கச் சென்றவர் இன்று 17-ஆம் தேதி மீண்டும் காலை தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 35 சவரன் தங்க நகைகள், ரூ. 4 லட்சம் ரொக்கப்  பணம் திருடு போனதை கண்டு மேலும் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் நகர போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.  பின்னர் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். 

இதுகுறித்து  திருவள்ளூர் நகர  போலீசில் வழக்கு பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை வைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

Post a Comment

0 Comments