மத்தியில் ஆளும் பா.ஜ.,வுக்கு, 2023- - 24ல் 2,600 கோடி ரூபாயும், எதிர்க்கட்சி யான காங்கிரசுக்கு 281 கோடி ரூபாயும் நன்கொடையாக கிடைத்துள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.லோக்சபா தேர்தல் கடந்த ஏப்ரல் 19ல் துவங்கி ஏழு கட்டங்களாக நடந்தது.
இதையொட்டி தேர்தல் நன்கொடையாக பா.ஜ., காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து நன்கொடைகள் பெற்றன. 2023- - 24ம் நிதியாண்டில் மார்ச் 31 வரை பல்வேறு கட்சிகள் பெற்ற நன்கொடை விபரங்களை தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டது.
பல்வேறு நன்கொடையாளர்களிடம் இருந்து மொத்தம் 2,600 கோடி ரூபாயை பா.ஜ., நன்கொடையாக பெற்றுள்ளது.
முன்னதாக 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன் இந்த கட்சி 740 கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றிருந்தது.இதேபோல், 2023 - -24ல் காங்கிரஸ் 281 கோடி ரூபாயை நன்கொடையாக பெற்றுள்ளது. 2018- - 19ல் 146 கோடி ரூபாயை அக்கட்சி பெற்றிருந்தது.
பா.ஜ., 2023 - -24ல் பெற்ற நன்கொடையில் அதிகபட்ச தொகையாக 723 கோடி ரூபாய், 'புரூடென்ட் எலக்ட்ரோல்' அறக்கட்டளையிடம் இருந்து பெறப்பட்டு உள்ளது.அதே நேரத்தில் காங்கிரசுக்கு, 'புரூடென்ட் எலக்ட்ரோல்' அறக்கட்டளை 150 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளது.
இது தவிர காங்., தலைவர்களான சோனியா, ராகுல், பிரியங்கா, கே.சி. வேணுகோபால், திக் விஜய் சிங் உள்ளிட்ட தலைவர்களும் காங்கிரசுக்கு 1.38 லட்சம் ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளனர்.இதற்கிடையே தெலுங்கானாவைச் சேர்ந்த சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத் ராஷ்ட்ர சமிதி 580 கோடி ரூபாயுடன் அதிகபட்ச நன்கொடை பெற்ற இரண்டாவது கட்சியாக உள்ளது. இது காங்., பெற்ற நன்கொடையை விட அதிகம்.
இதேபோல், காங்கிரஸ் பெற்றதைவிட 776.82 சதவீதம் அதிகமான நன்கொடையை பா.ஜ., பெற்றுள்ளது.லாட்டரி அதிபர் மார்ட்டினின், 'பியூச்சர் கேமிங் அண்டு ஹோட்டல்' நிறுவனம் பா.ஜ.,வுக்கு 3 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
இந்த நிறுவனம் திரிணமுல் காங்.,க்கு 542 கோடி ரூபாயும், தி.மு.க.,வுக்கு 502 கோடி ரூபாயும் நன்கொடையாக வழங்கிஉள்ளது.ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசுக்கு ரூ.154 கோடி நன்கொடையும் இந்த நிறுவனம் வழங்கியுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments