திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனுார் அணை அருகே, ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய முதலை பண்ணை உள்ளது. அணையிலும் ஏராளமான முதலைகள் வசிக்கின்றன. கோடைக் காலங்களில் அணையில் இருந்து வெளியே வந்து, கரைகளில் முதலைகள் இரை தேடுவது வழக்கம். அத்தகைய நேரங்களில் உள்ளூர் மீனவர்கள் பாதிக்கப்படுவர். கடந்த 2ம் தேதி கனமழையால், தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. அணையில் இருந்து வினாடிக்கு, 54,000 கன அடிக்கு மேல் வெள்ள உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
இதனால், தென்பெண்ணை ஆற்றில், 2 லட்சம் கன அடிக்கு மேல் நீர் வெளியேறி கடலுக்கு சென்றது.அப்போது, சாத்தனுார் அணையில் இருந்தும், அதனருகே உள்ள பண்ணையில் இருந்தும், 150க்கும் மேற்பட்ட முதலைகள் வெள்ளத்தில் வெளியேறி உள்ளன.இவை, ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் தஞ்சம் அடைந்துள்ளன. பல முதலைகள், முகத்துவாரம் வழியாக கடலுக்கும் சென்று உள்ளன.
வெள்ள நீர் வடிந்து வரும் நிலையில், நீர் நிலைகளில் தஞ்சம் அடைந்த முதலைகள், வெளியே தலைகாட்ட துவங்கியுள்ளன. கடலுாரில் மட்டும் இரண்டு முதலைகள் பிடிபட்டு உள்ளன. முதலைகள் வெளியேறியதால், ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள், குழந்தை கள், நீர்நிலைகளை பயன்படுத்துவோர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
0 Comments