கரூர் மாவட்டம் தரங்கம்பாடி, தோகைமலை, கடவூர், பெட்ட வாய் தலை பகுதியில் ஸ்ரீ முருகன் எலக்ட்ரானிக்ஸ் வேர்ல்ட் மற்றும் ஸ்ரீ முருகா சீட்ஸ் என்ற மாதாந்திர ஏலச்சீட்டு நிறுவனம் நடைபெற்று வந்துள்ளது. கடந்த தீபாவளிக்கு முன்பு இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் தலைமறைவாகி உள்ளனர். இது தொடர்பாக கடந்த வாரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி தோகைமலை காவல்துறையினர் எஃப் ஐ ஆர் பதிவு செய்துள்ளனர்.
மேலும் அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களை கைது செய்து நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ளனர். ஆனால் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகின்றது. இந்நிலையில் 250-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளை சார்ந்த மக்கள் தங்களது மகள், மகன் திருமணத்திற்காகவும், கல்வி செலவிற்காகவும் என பல்வேறு வகையில் சேமிப்பதற்காக மாதாந்திர சீட்டு ரூபாய் 25 ஆயிரம் முதல் 1 1/2 லட்சம் வரை பணம் செலுத்தி வந்துள்ளனர். இந்த தொகையானது சுமார் 1 1/2 கோடி ரூபாய் அளவிற்கு இருக்கும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.
கடந்த நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நிறுவனம் செயல்பட்டு வந்த முகவரிக்கு சென்று பார்த்தபோது பூட்டப்பட்டிருந்தது. இதில் ஊழியராக பணிபுரிந்து வந்த செந்தில்குமார், சிவகுமார் ஆகிய இருவரும் ஒவ்வொரு மாதமும் மாத சீட்டு தொகையை வங்கி கணக்கு மூலமாகவும் ஜிபே மூலமாகவும், பணத்தை வசூல் செய்து வந்துள்ளனர். தற்போது இவர்கள் இருவரும் தலைமறைவாகி விட்டனர். அதோடு திட்டமிட்டு சீட்டு நடத்திய பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்ததோடு பாதிக்கப்பட்ட நபர்களையும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்நிலையிலும் தோகைமலை காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் குறைத்தீர் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுக்க செல்லும்போதும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அனைவரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு கொடுக்க அழைத்து சென்றுள்ளனர்.
0 Comments