சொத்து வரி உயர்வு, கடை வாடகைக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி., ஆகியவற்றை கண்டித்து, திருப்பூர் அனைத்து வணிகர் சங்கங்கள் பேரவை சார்பில், நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது.
கடந்த 8ம் தேதி முதல் கடைகள் முன் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. திருப்பூர் மட்டுமின்றி, அவிநாசி, பல்லடம், தாராபுரம், காங்கயம், முத்துார் என, மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில், கடையடைப்பு போராட்டம் நடந்தது.திருப்பூர் அனைத்து வணிகர் சங்கங்கள் பேரவை தலைவர் துரைசாமி கூறியதாவது: திருப்பூர் மாநகராட்சியில், சொத்துவரி அபரிமிதமாக உயர்ந்துள்ளது. கோவை மாநகராட்சியை காட்டிலும் வரி அதிகமாக உள்ளது. மத்திய அரசின், வாடகை கட்டடத்துக்கான 18 சதவீத ஜி.எஸ்.டி.,யை ரத்து செய்ய வேண்டும்.மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நடந்த, கடையடைப்பு முழு வெற்றி பெற்றுள்ளது.
ஒரு நாள் கடையடைப்பால், 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பூருக்கு இன்று(19ம் தேதி) வரும் துணை முதல்வர் உதயநிதி, வணிகர் கோரிக்கையை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வரியை குறைக்காவிடில், அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு செய்வோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
0 Comments