சென்னை ஐகோர்ட்டில் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், தங்கள் நிறுவனத்தின் சார்பில் 'கொரோனா குமார்' என்ற படத்தை தயாரிக்க திட்டமிட்டு, அதில் நடிப்பதற்காக நடிகர் சிம்புவை ஒப்பந்தம் செய்ததாகவும், அந்த படத்தில் நடிப்பதற்கு முன்பணமாக நான்கரை கோடி ரூபாயை கடந்த 2021-ம் ஆண்டு அளித்ததாகவும், அந்த பணத்தை பெற்றுக்கொண்டு அவர் படப்பிடிக்கு வரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, 'கொரோனா குமார்' படத்தை முடித்து கொடுக்காமல் நடிகர் சிம்பு மற்ற படங்களில் நடிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. முன்னதாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை அளிக்கும்படி நடிகர் சிம்புக்கு கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நடிகர் சிம்பு தரப்பில் கோர்ட்டு உத்தரவுப்படி ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதம் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இந்த விவகாரத்தில் மத்தியஸ்தராக ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்து இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்த நீதிபதி உத்தரவிட்டார். அதே சமயம் 'கொரோனா குமார்' படத்தை முடிக்காமல் மற்ற படங்களில் நடிக்க நடிகர் சிம்புவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதி, அவ்வாறு தடை விதித்தால் அது மற்ற நிறுவனங்களுக்கு தொழில் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு நீதிபதி பி.பி.பாலாஜி முன் விசாரணைக்கு வந்த போது, நடிகர் சிம்பு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன், மத்தியஸ்தர் முன் உள்ள வழக்கை இரு தரப்பினரும் திரும்பப் பெற்று விட்டதால், நடிகர் சிம்பு தரப்பில் டெபாசிட் செய்யப்பட்ட ஒரு கோடி ரூபாயை வட்டியுடன் சேர்த்து ஒரு கோடியே 4 லட்சத்து 98 ஆயிரத்து 917 ரூபாயை திருப்பித்தர உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, டெபாசிட் தொகையை வட்டியுடன் திருப்பிக் கொடுக்க உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
0 Comments