மக்கள் மனம், வேட்பாளர் தேர்வு, பிரசார திட்டம் என்று வழக்கமாக உள்ள தேர்தல் பார்முலாவை அரசியல் களத்தில் மாற்றியவர் பிரசாந்த் கிஷோர். அரசியல் ரீதியான சில கூட்டணி பிளஸ் தேர்தல் ஓட்டு சதவீதக் கணக்குகள், அதற்கான அச்சார வேலைகள், பப்ளிசிட்டி இதுவே வெற்றிக்கு போதுமானது என்ற அஜெண்டாவை அரசியல் கட்சிகளுக்கு அறிமுகப்படுத்தியவர்.
அரசியல் கட்சிகளுக்கான பப்ளிசிட்டி என்ற ஒற்றை புள்ளியில் அவர் அறிமுகப்படுத்திய டிசைன், லோக்சபா தேர்தலில் மட்டுமல்ல, மாநில அரசியலிலும் புதிய தடத்தை பதித்தது. சிறந்த அரசியல் வியூக அமைப்பாளர் என்ற முத்திரையையும் பெற்றுத் தர, அந்த கோதாவில் ஜன் சுராஜ் என்ற கட்சியை ஆரம்பித்து, பீகார் மாநில தேர்தலில் கால் வைத்தார்.4 தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்ட சட்டசபை இடைத்தேர்தலில் தமது கட்சி போட்டியிடும் என்று அறிவித்தார். தராரி தொகுதியில் கிரண் சிங், ராம்கரில் சுஷில் குமார் சிங், இமாம்கன்ஜ் தொகுதியில் ஜிதேந்திர பாஸ்வான், பெலாகன்ஜ் தொகுதியில் முகமத் அமாஜத் ஆகியோரை வேட்பாளர்களாகவும் அறிவித்தார்.
இந்த தேர்தல் முடிவுகள் தமது எதிர்கால அரசியல் பயணத்தை மாற்றி அமைக்கும். வெற்றி கிடைக்கும், அதன் மூலம் அரசியல் பாதை பலப்படும் என்று கனவு கண்ட பிரசாந்த் கிஷோர், இந்த 4 தொகுதிகளில் மட்டும் 100க்கும் மேற்பட்ட தேர்தல் பிரசார கூட்டங்களை நடத்தினார். 30 ஆண்டுகால ஆட்சிக்கு முடிவுரை எழுத வேண்டிய நேரம் வந்துவிட்டது, உங்களுக்கு நன்மை செய்யவே வந்துள்ளேன் என்று மக்களுக்கு வாக்குறுதியும் அளித்தார்.
ராஷ்டிரியா ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு தமது கட்சி தான் பிரதான போட்டி என்று செல்லும் இடங்களில் எல்லாம் அறிவித்தார். இப்போது தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், போட்டியிட்ட 4 தொகுதிகளிலும் சொற்பமான வாக்குகளே பெற்று அவரது கட்சி படுதோல்வி அடைந்திருக்கிறது.
ஊர், உலகத்தில் இருக்கும் கட்சிகளுக்கெல்லாம் பலப்பல ஐடியாக்கள் சொல்லி காசு பார்த்த பிரசாந்த் கிஷோர், தமது சொந்த கட்சியை ஜொலிக்க வைப்பதில் தோல்வி அடைந்துள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்ட நிலையில், 'இனி பிரசாந்த் கிஷோரின் எதிர்கால அரசியலுக்கு யார் ஐடியா தருவார்' என்ற விமர்சனங்கள் இணையத்தில் வலம் வரத் தொடங்கியுள்ளன.
0 Comments