பறிக்கப்பட்ட பதவிகளை மீண்டும் தளவாய் சுந்தரத்துக்கு வழங்கிய எடப்பாடி பழனிச்சாமி

 


கன்னியாகுமரி மாவட்ட அ.தி.மு.க.,வில் தளவாய் சுந்தரம் அனைவரும் அறியப்படும் நபராக உள்ளவர். பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,சுக்கு மிகவும் நெருக்கமானவர்களில் இவரும் ஒருவர். 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் எந்த தொகுதியிலும் அ.தி.மு.க., வாகை சூடாத போதும் தமிழக அரசின் டில்லி பிரதிநிதி என்ற பொறுப்பை அவருக்கு இ.பி.எஸ்., வழங்கினார். தற்போது அவர், கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ., வாக உள்ளார்.

கட்சியில் முக்கிய முகமாக இருந்த அவரை கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்தும், அ.தி.மு.க., அமைப்பு செயலாளர் என்ற பொறுப்பில் இருந்தும் கடந்த அக்டோபர் 8ம் தேதி நீக்கப்பட்டார். அவரின் நீக்கத்துக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் கோஷ்டி சண்டை ஒரு காரணம் என்றாலும், ஆர்.எஸ்.எஸ்.,பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தது பிரதான காரணமாக முன் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கட்சி கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும், முரண்பட்ட வகையில் செயல்பட்டதாகவும், கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு நடந்து கொண்டதாகவும், கிடைத்த தகவல் அடிப்படையில் இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டியிருப்பதால், தற்காலிகமாக பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவதாக, அப்போது இ.பி.எஸ்., கூறி இருந்தார்.இந்நிலையில், தன் தரப்பு விளக்கத்தை தலைமைக்கு தளவாய் சுந்தரம் தெளிவாக கூறினார். 

அதன் மூலம், தளவாய் சுந்தரம் மீது தவறு எதுவும் இல்லை என்பதை புரிந்து கொண்ட இ.பி.எஸ்., பறிக்கப்பட்ட பதவிகளை அவருக்கு மீண்டும் வழங்கி உத்தரவிட்டுள்ளார். கட்சியின் அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்புகள் அவருக்கு மீண்டும் வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கட்சி தலைமை வெளியிட்டு உள்ளது.பறிக்கப்பட்ட பொறுப்புகள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதால் அவரது ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். வழக்கம் போல் சுறுசுறுப்புடன் தமது கட்சி பணிகளை அவர் தொடங்குவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments