திருச்சி மாவட்டம், முசிறி அருகே சாலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு. இவரது மகன் திவாகர் (17 வயது). இவர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கூலி தொழிலாளியான தங்கராசு தனது மகன் திவாகருடன், பெரமூர் பகுதியில் உள்ள கோரை வயலில் காய வைத்திருந்த கோரையை அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது இடி, மின்னலுடன் லேசான மழை பெய்தது. திடீரென மின்னல் தாக்கியதில் தங்கராசு கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த திவாகர் தந்தை கீழே விழுந்தது குறித்து உறவினர்களுக்கு செல்போன் மூலம் தெரிவித்தபோது, அவர் மீதும் மின்னல் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த நிலையில் ஏதோ அசம்பாவிதம் நடைபெற்றதை அறிந்த உறவினர்கள் வயலுக்கு விரைந்து வந்தனர். அங்கு திவாகரன் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பலத்த காயம் அடைந்த தங்கராசுவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments