மகன் இறந்த துக்கம் மாறுவதற்குள் தத்தெடுத்து வளர்த்த குழந்தையும் உயிரிழப்பு


 கரூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர் பாலம் கிராமத்தில் கணபதி-சித்ரா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் இருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நாய் கடித்ததில் குழந்தை பரிதாபமாக இறந்துவிட்டான். இதன் காரணமாக கணவன் மனைவி இருவரும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆசிரமத்தில் இருந்து ஒன்றரை வயது குழந்தையை தத்தெடுத்தனர். 

கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக கிஷோர் என்ற குழந்தையை அவர்கள் தத்தெடுத்து வளர்த்து வந்தனர். இவர்களுடைய வீடு தென்கரை பாசன வாய்க்கால் அருகே உள்ளது. இந் நிலையில் சித்ரா நேற்று வழக்கு போல் தன் குழந்தைக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு வீட்டின் முன்பாக விளையாட விட்டுள்ளார். பின்னர் அவர் வீட்டிற்குள் சென்று வேலை பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர் அரைமணி நேரம் கழித்து சித்ரா வெளியே வந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்து அக்கம்பக்கத்தினர் உதவியோடு பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார்.

இதனால் தென்கரை பாசன வாய்க்காலுக்குள் குழந்தை இறங்கி இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்ட நிலையில் உடனடியாக மாயனூர் பகுதியில் உள்ள அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் கதவணையில் இருந்து வாய்க்காலுக்கு செல்லும் தண்ணீர் நிறுத்தப்பட்டது. பின்னர் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் வாய்க்காலுக்குள் இறங்கி குழந்தையை தேடிய நிலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு குழந்தை சடலமாக மீட்கப்பட்டான். ஏற்கனவே பெற்ற குழந்தையும் உயிரிழந்த நிலையில் தற்போது தத்தெடுத்து வளர்த்த குழந்தையும் இறந்தது பெற்றோர் மத்தியில் தீராத சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

Post a Comment

0 Comments