புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் மழையால் பாதிக்கப்படும் மக்கள், வீட்டில் தங்க முடியாத நிலையில் உள்ளவர்கள் தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசலில் தங்கிக் கொள்ளலாம் என மாவட்ட தலைவர் சித்திக் ரகுமான் அறிவித்துள்ளார்.வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஃபெங்கால் புயல் காரணமாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்த புயல், மழையால் பாதிக்கப்படும் மக்களும், வீட்டில் தங்க முடியாத நிலையில் இருப்பவர்களும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசல்களிலும் ஜாதி, மத பேதமின்றி தங்கிக் கொள்ளலாம் என மாவட்டத் தலைவர் சித்திக் ரகுமான் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து கடலோரப் பகுதியில் உள்ள அம்மாபட்டினம் கிளை தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசலில் மாடியில் பெண்களுக்கும், கீழ்தளத்தில் ஆண்களுக்கும் இடம் ஒதுக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசலிலும் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் மாவட்டத்திலுள்ள அனைத்து பேரிடர் மீட்பு தொண்டர்களும், ஆம்புலன்ஸ்களும் மீட்பு பணிக்கு தயார் நிலையில் இருப்பதாகவும், உதவி தேவைப்படுபவர்கள் 8344562682, 8344562683, 8344562688 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட, கிளை மற்றும் பாண்டிச்சேரி தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பும் அறிவித்துள்ளது.
சென்னை பெருவெள்ளம், கஜா புயல், கொரோனா பெருந்தொற்று போன்ற காலகட்டங்களில் மீட்பு, நிவாரண பணிகளில் தவ்ஹீத் ஜமாஅத் ஈடுபட்டது மற்றும் அவசர ரத்ததானம் போன்ற உயிர்காக்கும் மருத்துவ சேவைகளையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
0 Comments