புதுக்கோட்டை: தவணை கட்ட தவறியதால் வீட்டின் முன்பு பெயிண்டால் எழுதிய நிதி நிறுவன ஊழியர்கள்..... தற்கொலைக்கு முயன்ற நபர்

 


புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆதனக்கோட்டை பகுதியில் தங்களது சொந்த வீட்டில் வசித்து வரும் சகோதரர்கள் பாலகிருஷ்ணன், சக்திவேல். இருவரும் விவசாய தொழில் செய்து வருகின்றனர். ஆடு வளர்த்து விற்கும் தொழிலும் செய்து வருகின்றனர். இந்த நிலையில் சகோதரர்கள் இருவரும் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கி உள்ளனர். பாலகிருஷ்ணன் தனது மகளின் திருமணத்திற்காக கடன் வாங்கியுள்ளார். அதேபோன்று சக்திவேல் வேறொரு நிதி நிறுவனத்திடம் தொழில் ரீதியாக கடன் வாங்கியுள்ளார். இருவரும் தங்களது தவணைத் தொகைகளை சரியான முறையில் கட்டி வந்துள்ளனர்.

திடீரென அவர்களது தாய்க்கு உடல் நலம் முடியாத காரணத்தினால் மருத்துவ செலவுக்காக பணத்தை செலவிட்டு வந்துள்ளனர். இதனால் கடைசி மூன்று மாத காலங்களாக தவணை பணத்தை கட்டாமல் இருந்துள்ளனர். இதனால் நிதி நிறுவனத்தில் இருந்து வந்த ஊழியர்கள் அவர்களது சொந்த வீட்டில் பெயிண்ட் மூலம் மூன்று மாத கடன் தொகை பாக்கி ரூபாய் 45,204 என சுவர் முழுவதும் பெரிதாக எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கிராமத்தில் உள்ளவர்கள் விசாரித்துள்ளனர். 

இதனால் பாலகிருஷ்ணனின் மனைவி தனது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார்.இதனால் பாலகிருஷ்ணன் வீட்டிற்கு வராமல் வெளியிலேயே தங்கி வருகிறார். சக்திவேல் தற்கொலைக்கும் முயன்று விஷம் அருந்தி உள்ளார். அவரை அக்கம் பக்கத்தினர் காப்பாற்றி அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கறிஞர் ஒருவர் கூறியதாவது, நிதி நிறுவன ஊழியர்கள் தவணைத்தொகை கட்டாமல் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு சட்ட ரீதியான நடவடிக்கைகள் மட்டுமே எடுக்க முடியும். இவ்வாறு தகாத செயல்களில் ஈடுபடுவது தவறாகும். இது குறித்து சகோதரர்கள் இருவரும் நிதி நிறுவனத்தின் மீது சட்டப்படி வழக்கு தொடர முடியும் என கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments