பாம்பன் புதிய ரயில் பாலத்தில் 75 கி.மீ வேகத்தில் ரயிலை இயக்க, ரயில்வே பாதுகாப்பு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. பாம்பன் கடலில் ரூ.550 கோடி செலவில் புதிதாக இரட்டை வழித்தட மின்சார ரயில் பாலம் கட்டப்பட்டது. கப்பல் கடந்து செல்வதற்கு வழிவிடும் லிஃப்ட் தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த செங்குத்து தூக்குப்பாலம், இந்தியாவின் முதல் பாலமாகும். நவீன தொழில்நுட்பத்தில் கட்டப்பட்ட புதிய ரயில் பாலம், பல்வேறு கட்ட சோதனை ஆய்வுக்கு பிறகு தென்னக ரயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டது.
ராமேஸ்வரம் – மண்டபம் இடையே கடந்த நவ. 13 மற்றும் 14ம் தேதி நடந்த சிறப்பு சோதனை ரயில் 90 கி.மீ வேகத்தில் வெற்றிகரமாக இயக்கப்பட்டது. இந்த இரண்டு நாள் ஆய்வின் அனுமதி அறிக்கை நேற்று வெளியானது. அதில், பாம்பன் புதிய ரயில் பாலம் நவீன தொழில்நுட்பத்தில் உறுதியாக கட்டப்பட்டுள்ளது. பயணிகளுடன் ரயிலை அதிகபட்சமாக 75 கி.மீ வேகம் வரை இயக்கலாம். செங்குத்து தூக்குப்பாலத்தில் மட்டும் 50 கி.மீ வேகத்தில் இயக்கப்பட வேண்டும்.செங்குத்து தூக்குப்பாலத்தை 10 நிமிடத்தில் உயர்த்தி இறக்கும் வேகத்தில் இயக்கலாம்.
மேலும் 100 கி.மீ வேகத்தில் காற்று வீசினால் பாலத்தை உயர்த்தி, இறக்க அனுமதி இல்லை. காற்றின் வேகம் 58 கி.மீ வேகத்தில் வீசினால் பாலத்தில் ரயிலை இயக்க அனுமதி இல்லை. சென்சார் கருவிகள் காற்றின் வேகத்தை அளவிட்டு ரெட் சிக்னல் கொடுக்கும் உள்ளிட்ட பல செயல்பாடுகள் குறித்து ஆய்வின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொறியாளர்கள் தெரிவித்தனர்.
0 Comments