கட்டுமாவடி கடலோரப் பகுதிகள் உட்பட புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 2 வது நாளாக மழை


புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்டுமாவடி கடலோரப் பகுதிகள் உட்பட மாவட்டம் முழுவதும் பரவலாக இரண்டாவது நாளாக மழை பெய்து வருகிறது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. 

குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை ஆகிய இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. மாவட்டத்தின் கடற்கரை பகுதிகளான கட்டுமாவடி, கிருஷ்ணாஜிபட்டினம், மணமேல்குடி, அம்மாபட்டினம், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மீமிசல் ஆகிய பகுதிகள் உட்பட அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து இரண்டு நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. 

தொடர் மழையினால் புதன்கிழமை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டது. புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் கட்டுமாவடி மீன் மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகிறது. மீன்களின் வரத்து இல்லாததால் மீன்களின் விலை உயர்ந்துள்ளது. தொடர்ந்து இரண்டு நாட்களாக மழை பெய்து வருவதால் மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதனால் கடை தெருக்களில் மக்கள் நடமாட்டம் மிகக் குறைவாகவே காணப்படுகிறது.

Post a Comment

0 Comments