ஆவின் பாலகங்கள் 24 மணி நேரமும் இயங்கும் - ஆவின் நிர்வாகம் அறிவிப்பு

 


மழை ஒருபக்கம் பெய்து வந்தாலும் மறுபக்கம் 24 மணி நேரமும் ஆவின் பாலகங்கள் இயங்கும் என்று ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. நாளை புயல் உருவாகக்கூடும் என்ற நிலையில் சென்னையிலும், கடலோர மாவட்டங்களிலும் பல்வேறு பகுதிகளில் இடைவிடாது மழை பெய்து வருகிறது.

அதிகமாக மழைப்பொழிவு இருக்கக் கூடும் என்பதால் நவ.26, 27 ஆகிய தேதிகளில் தமிழகத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. வானிலை நிலவர அறிவிப்பை தொடர்ந்து, டெல்டா மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளார்.தலைநகர் சென்னையில் மழையை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சென்னையில் 24 மணி நேரமும் ஆவின் பால் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து ஆவின் நிர்வாகம் கூறி உள்ளதாவது;

கனமழை முன் எச்சரிக்கையை தொடர்ந்து சென்னையில் 24 மணி நேரமும் 8 இடங்களில் (அம்பத்தூர், அண்ணாநகர் கிழக்கு, மாதவரம், வண்ணாந்துறை, பெசன்ட் நகர், சோழிங்கநல்லூர், விருகம்பாக்கம், மயிலாப்பூர்) ஆவின் பாலகங்கள் செயல்படும்.

அனைவருக்கும் பால் கிடைப்பதை உறுதி செய்ய ஒரு நபருக்கு 4 பாக்கெட் பால் மட்டுமே வழங்கப்படும். தேவையான அளவு ஆவின்பால் பவுடர் மற்றும் UHT பால் ஆவின் பாலங்களில் சேமித்து வைக்கப்பட்டு உள்ளன.

வழக்கத்தை விட கூடுதலாக ஆவின் பால் இருப்பு வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. சென்னை மாநகரில் தேவைப்படும் இடங்களில் தற்காலிக பால் விற்பனை நிலையங்கள் அமைத்து பால், பால் பவுடர் விநியோகிக்கப்படும்.பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி பால் விநியோகம் செய்ய தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

இவ்வாறு ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments